சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் 2.2%

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் 2.2%

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Sep 2026 - 6:28 pm

2 mins read

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 2.2 விழுக்காடாக இருந்தது என சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்து அடிப்படைப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

ஆகஸ்ட் மாதப் பணவீக்க விகிதம் அதற்கு முந்திய ஜூலை மாதத்தில் பதிவான 2 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.

சேவைகள், சில்லறை விற்பனைப் பொருள்கள், உணவு ஆகியவற்றின் விலை அல்லது கட்டணம் உயர்ந்தது அடிப்படைப் பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இணைந்து புதன்கிழமை (செப்டம்பர் 23) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அதேபோல சிங்கப்பூரின் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் ஆகஸ்ட் மாதம் 2.3 விழுக்காடு என சற்று அதிகரித்துக் காணப்பட்டது. ஜூலையில் அந்த விகிதம் 2.2 விழுக்காடாக இருந்தது.

தனியார் போக்குவரத்து தொடர்பான பணவீக்கம் குறைந்திருந்தபோதிலும், அடிப்படைப் பணவீக்கம் அதைவிட அதிகமாக உயர்ந்ததன் விளைவாக ஆகஸ்ட் மாதப் பணவீக்கத்தில் சிறிய ஏற்றம் பதிவானது.

கார்களின் விலை குறைவான விகிதத்தில் ஏறியதால் தனியார் போக்குவரத்துக்கான பணவீக்கம் ஜூலை மாதத்தின் 8 விழுக்காட்டைவிட அரை விழுக்காடு குறைந்து 7.5 விழுக்காடு ஆனது.

அதேவேளை, விமானக் கட்டணங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் சேவைகளின் கட்டணங்கள் வேகமாக உயர்ந்ததன் காரணமாக, சேவைத் துறை சார்ந்த பணவீக்கம் ஜூலை மாதத்தின் 1.7 விழுக்காட்டைவிட சற்று அதிகரித்து 2 விழுக்காட்டுக்குச் சென்றது.

ஆடை, காலணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக, சில்லறை விற்பனை மற்றும் பிற பொருள்களுக்கான பணவீக்கம் 1.8 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. ஜூலையில் அது 1.4 விழுக்காடாக இருந்தது.

சமைக்கப்படாத உணவுப் பொருள்களின் பணவீக்கம் குறைந்தபோதிலும், உணவு சார்ந்த சேவைகளின் பணவீக்கம் அதிகரித்ததன் விளைவாக, ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தின் 2.2 விழுக்காட்டைவிட ஆகஸ்ட்டில் 2.3 விழுக்காடு என சற்று அதிகரித்தது.

ஜூலை மாதத்தைப் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் மின்சாரக் கட்டணங்கள் அதே வேகத்தில் உயர்ந்ததால், மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளின் பணவீக்கம் 8.7 விழுக்காடு என மாற்றமின்றி இருந்தது.

“உலகளாவிய எரிசக்தி விலைகள் அதிகரித்திருப்பது சிங்கப்பூரின் மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்களும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது,” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விலைகள் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் தணியும் வரை, அடிப்படைப் பணவீக்கம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தற்போதைய சூழலில், பணவீக்க முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, அது மேலும் அதிகரிக்கும் அபாயமே நிலவுகிறது,” என்று அமைச்சும் ஆணையமும் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்