சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் 2024 டிசம்பரில் தொடர்ந்து சரிந்தது. தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளைச் சேர்க்காத மூலாதாரப் பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் 1.8 விழுக்காடாகத் தணிந்தது. ஒப்புநோக்க, நவம்பரில் அது 1.9 விழுக்காடாக இருந்தது.
புளூம்பெர்க் கருத்தாய்வில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்த 1.7 விழுக்காட்டுக்கு சற்று அதிகமாக இது இருந்தாலும், 2021 நவம்பரில் 1.6 விழுக்காடாக இருந்த மூலாதாரப் பணவீக்கத்துக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவு.
ஒட்டுமொத்த பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் 1.6 விழுக்காடாக இருந்தது. நவம்பரிலும் அது இதே நிலையில்தான் வந்தது. ஆனால், புளூம்பெர்க் கருத்தாய்வில் முன்னுரைக்கப்பட்ட 1.5 விழுக்காட்டைவிட இது சற்று அதிகம்.
மாத அடிப்படையில், மூலாதாரப் பணவீக்கம் 0.5 விழுக்காடும் ஒட்டுமொத்த பணவீக்கம் 0.3 விழுக்காடும் கூடியது.
ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணரான செலீனா லிங், பணவீக்கம் குறித்து ஒரு மாதத்துக்கான தரவில் அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்த வேண்டாம் எனக் கூறினார். ஏனெனில், 2025 முழுவதுக்கும் மூலாதாரப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் ஏறக்குறைய 2 விழுக்காடாகத் தொடரும் என்றார் அவர்.
2025க்கான மூலாதாரப் பணவீக்கம் 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என ஏற்கெனவே அதிகாரபூர்வமாக முன்னுரைக்கப்பட்டு இருந்தது.
டிபிஎஸ் பொருளியல் நிபுணர் சுவா ஹான் தெங், 2025க்கான தற்போதைய அதிகாரபூர்வ முன்னுரைப்பு கீழ்நோக்கி திருத்தப்படும் என்பதை டிபிஎஸ் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
“2025ல் மூலாதாரப் பணவீக்கம் 2 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2025க்கான எங்கள் சராசரி முன்னுரைப்பை 1.5 விழுக்காடாக அண்மையில் திருத்தியுள்ளோம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
2024 முழுவதுக்கும், மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 2.7 விழுக்காடாக இருந்தது. 2023ல் அது 4.2 விழுக்காடாகப் பதிவானது. சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வியாழக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தன.
ஒட்டுமொத்த பணவீக்கம் சராசரியாக 2.4 விழுக்காடாகப் பதிவானது. 2023ல் இருந்த 4.8 விழுக்காட்டை விட இது பாதியளவு.
2025க்கான பணவீக்க முன்னுரைப்பு, வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) வெளிவரும் ஆணையத்தின் நாணையக் கொள்கை அறிக்கையில் புதுப்பிக்கப்படும் என ஆணையமும் அமைச்சும் தெரிவித்தன.
பணவீக்கம் குறைந்துவரும் வேளையில், ஆணையம் அதன் நாணயக் கொள்கையைத் தளர்த்தும் என புளூம்பெர்க் கருத்தாய்வில் பங்கெடுத்த 17 பொருளியல் வல்லுநர்களில் 11 பேர் கணித்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய வரிவிதிப்புகளைச் செயல்படுத்தும்போது, உலகளாவிய பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில்கொண்டு ஆணையம் அதன் நாணயக் கொள்கையைத் தொடர்ந்து கடுமையாக வைத்திருக்கும் என மற்ற பொருளியல் நிபுணர்கள் கருதினர்.