தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம்: நாலாண்டு காணாத குறைவு

2 mins read
16a55c73-a7cc-4d7f-93ca-219c93bf6aef
சேவைத் துறையில் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. ஜூலையில் அது 0.7 விழுக்காடாக இருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

சிங்கப்பூரின் விலைவாசி இவ்வாண்டு (2025) ஆகஸ்ட் மாதம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இறங்கியது. பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு ஆகக் குறைந்த விகிதத்தைத் தொட்டது.

பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 0.3 விழுக்காட்டுக்குக் குறைந்தது. ஜூலையில் அது 0.5 விழுக்காடாக இருந்தது. சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரின் கடந்த மாதப் பணவீக்கம் 0.5 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் கருத்தாய்வு முன்னுரைத்திருந்தது.

அடிப்படைப் பணவீக்கத்தில் தனியார்ப் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா. குடும்பங்களின் செலவை மேலும் சிறந்த வகையில் பிரதிபலிக்க அது உதவும்.

ஒட்டுமொத்தப் பணவீக்கமும் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தது. ஜூலையில் 0.6 விழுக்காடாக இருந்த அது சென்ற மாதம் 0.5 விழுக்காட்டுக்குச் சுருங்கியது. அடிப்படைப் பணவீக்கமும் தங்குமிடச் செலவும் குறைந்ததே அதற்கு முக்கியக் காரணம்.

அடிப்படைப் பணவீக்கம் இறங்கியதற்குச் சேவைத் துறையில் பணவீக்கம் மிதமானதே காரணம் என்று ஆணையமும் அமைச்சும் குறிப்பிட்டன. சேவைத் துறையில் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது. ஜூலையில் அது 0.7 விழுக்காடாக இருந்தது. விடுமுறைச் செலவு, விமானக் கட்டணம், உள்நோயாளிச் சேவைகள் முதலியவை வெகுவாக இறங்கிய நிலையிலும் சேவைத்துறையின் பணவீக்கம் மிதமாகவே குறைந்தது.

மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் 5.7 விழுக்காடு வீழ்ச்சிகண்டன.

தங்குமிடச் செலவு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.1 விழுக்காட்டுப் புள்ளி குறைந்து 0.4 விழுக்காடானது. வீட்டு வாடகைகள் சற்றுக் கூடியதே அதற்குக் காரணம்.

சில்லறை வர்த்தகத்தில் பொருள்களின் விலைகள் கொஞ்சம் மெதுவடைந்தன. ஜூலையில் 0.5 விழுக்காட்டுச் சரிவைக் கண்ட அவை கடந்த மாதம் 0.2 விழுக்காட்டுக்குக் குறைந்தன. துணிமணிகள், காலணிகளின் விலைகள் கூடின. தொலைத்தொடர்புச் சாதனங்களின் விலைகள் சற்றுக் குறைந்தன.

தனியார்ப் போக்குவரத்தைப் பொறுத்தவரை பணவீக்கம் போன மாதம் 2.4 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. ஜூலையில் அது 2.1 விழுக்காடாக இருந்தது. கார்களின் விலைகள் ஏற்றங்கண்டன. பெட்ரோல் விலை சிறிது இறங்கியது.

உணவு விலைகளில் அவ்வளவு மாற்றமில்லை.

வெளிப்புறச் சூழலால் உருவாகக்கூடிய பணவீக்கம் சிறிது காலத்திற்கு மிதமானதாகவே இருக்கும் என்று ஆணையமும் அமைச்சும் கூறுகின்றன. உலக அளவில் தேவை குறைந்திருப்பது வர்த்தகப் பூசல்களால் ஏற்படக்கூடிய பணவீக்கச் சிக்கல்களை அகற்றிவிடும் என்று நம்பப்படுகிறது.

அடிப்படைப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் இந்த ஆண்டில் 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் எனும் முன்னுரைப்பில் மாற்றமில்லை என்று ஆணையமும் அமைச்சும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்