சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.5 விழுக்காடு சரிந்ததை அடுத்து ஜூலை மாதப் பயனீட்டாளர் விலைக் குறியீடு தணிந்தது.
ஜூன் மாத அடிப்படைப் பணவீக்கம் மே மாதத்தைப் போல 0.6 விழுக்காடாகப் பதிவானது. நான்காண்டுகளில் இல்லாத வகையில் மார்ச் மாதம் அது 0.5 விழுக்காடாகப் பதிவானது.
சில்லறை வர்த்தகம், இதர பொருள்களின் விலைகள் குறைந்ததோடு குறைவான மின்சார, எரிசக்தி பணவீக்கத்தால் அடிப்படைப் பணவீக்கம் சுருங்கியதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்தன.
குடும்பச் செலவினத்தை இன்னும் சிறந்த வகையில் பிரதிபலிக்க அடிப்படைப் பணவீக்கத்தில் தனியார் போக்குவரத்தும் தங்குமிடங்களும் சேர்க்கப்படவில்லை.
புளூம்பர்க் கருத்தாய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 0.6 விழுக்காட்டைவிட அடிப்படைப் பணவீக்கம் குறைவாக இருந்தது.
இதற்கிடையே, ஜூன் மாதத்தில் 0.8 விழுக்காடாக இருந்த ஒட்டுமொத்த பணவீக்கம், தங்குமிட செலவினத்தில் ஏற்பட்ட சிறிய அதிகரிப்பால் ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஜூலை மாதத்தில் 0.6 விழுக்காடு குறைந்தது.
ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்புநோக்க இரண்டு பிரிவுகளில் ஜூலை மாதம் குறைந்த கட்டணங்கள் பதிவாகின.
சில்லறை வர்த்தகமும் இதர பொருள்களின் விலைகளும் 0.5 விழுக்காடு சரிந்தன.
தொடர்புடைய செய்திகள்
மின்சார கட்டணங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவை அடுத்து மின்சாரம், எரிசக்தி கட்டணங்கள் ஜூலை மாதத்தில் 5.6 விழுக்காடாக சரிந்தன.
தங்குமிட செலவினம் மிதமான நிலையில் உயர்ந்தது. வீடுகளைப் பராமரித்தல், பழுதுபார்க்கும் செலவுகள், வீட்டு வாடகை ஆகியவை சிறிதளவு உயர்ந்ததால் தங்குமிட செலவினம் 0.5 விழுக்காடு கூடியது.
கார் விலைகள் கணிசமாகக் கூடியதால் தனியார் போக்குவரத்து பணவீக்கம் ஜூலையில் 2.1 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.