சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டது.
அது பேரளவில் குறைந்து 0.8 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் மூலாதாரப் பணவீக்கம் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மூலாதாரப் பணவீக்கத்தில் தனியார் போக்குவரத்துச் செலவுகளும் வசிப்பிடம் தொடர்பான செலவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.
இது சிங்கப்பூர் குடும்பங்களின் செலவினங்களை நன்கு பிரதிபலிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் 1.7 விழுக்காடாகத் திருத்தப்பட்டது.
ஜனவரி மாதத்தில், ஆண்டு அடிப்படையில் அது 0.8 விழுக்காடாகச் சரிந்தது.
இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் ஆகக் குறைவாக 0.6 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூலாதாரப் பணவீக்கம் 3.1 விழுக்காடாக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் பதிவான மூலாதாரப் பணவீக்கம் மிகவும் குறைவு.
குடும்பங்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீட்டின் அடித்தள அளவுகோல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தெரிவித்தது.
சிங்கப்பூர்வாசி குடும்பங்களின் ஆக அண்மைய பயனீட்டாளர் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் பயனீட்டாளர் விலைக் குறியீட்டின் அடித்தள அளவுகோல் மாற்றி அமைக்கப்படும்.
ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம், ஆண்டு அடிப்படையில் 1.2 விழுக்காடாகக் குறைந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அது 1.5 விழுக்காடாகத் திருத்தப்பட்டிருந்தது.
மாத அடிப்படையில், மூலாதாரப் பணவீக்கமும் ஒட்டுமொத்த பணவீக்கமும் முறையே 0.2 விழுக்காடு, 0.7 விழுக்காடு சரிந்தன.
இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிப்பதால் ஏற்படும் பணவீக்கம் மிதமான அளவில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்தன.
கடந்த ஜனவரி மாதம் மின்சாரம் மற்றும் எரிவாயு, சில்லறை வர்த்தகம் மற்றும் இதர பொருள்கள் ஆகிய இரண்டு பிரிவுகளின் விலை குறைந்தது.
மின்சாரம் மற்றும் எரிவாயு விலை ஆண்டு அடிப்படையில் 2.9 விழுக்காடு இறக்கம் கண்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது 2.4 விழுக்காடு அதிகரித்திருந்தது.
உணவுக்கான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் 1.5 விழுக்காடாகக் குறைந்தது.
சேவைகளுக்கான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் 1 விழுக்காடாகச் சுருங்கியது.

