ஜனவரியில் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் 1 விழுக்காட்டுக்குச் சரிந்தது

ஜனவரியில் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் 1 விழுக்காட்டுக்குச் சரிந்தது

2 mins read
38192ea4-99eb-4166-82b3-0d15b8460a5d
ஜனவரியில் அடிப்படைப் பணவீக்கம் 1.5 விழுக்காடாக இருக்கும் என்று பொருளியல் பகுப்பாய்வாளர்கள் கணித்து இருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணவீக்கம் என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் பயனீட்டாளர் விலைகள் இவ்வாண்டின் முதல் மாதத்தில் ஒரு விழுக்காட்டுக்குச் சரிந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்து உள்ளன.

சேவைத்துறையின் பணவீக்கம் மிதமடைந்தது, அந்தச் சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

2025 டிசம்பர் மாதம் அடிப்படைப் பணவீக்கம் 1.2 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.

அடிப்படைப் பணவீக்கத்தில் தனியார் போக்குவரத்துச் செலவுகளும் தங்குமிடச் செலவுகளும் இடம்பெறாது.

ஜனவரி மாதப் பணவீக்கம் 1.5 விழுக்காட்டுக்கு உயரும் என்று புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் பங்கேற்ற பொருளியல் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.

அடிப்படைப் பணவீக்கம் குறைந்த அதேநேரம் எல்லாச் செலவுகளையும் விலைகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஜனவரி மாதம் 1.4 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. தங்குமிடச் செலவைக் கணக்கிடும் பணவீக்கம் அதிகரித்தது அதற்கு முக்கிய காரணம்.

டிசம்பர் மாதம் அது 1.2 விழுக்காடாக இருந்தது. ஜனவரியில் அது 1.6 விழுக்காடாக அதிகரிக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்தனர்.

தங்குமிடச் செலவுக்கான பணவீக்கம் டிசம்பர் மாதம் 0.3 விழுக்காடாக இருந்த நிலையில், ஜனவரி மாதம் 1.9 விழுக்காட்டுக்கு அது அதிகரித்தது.

அதற்கு, வீடுகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் அதிகமாக உயர்ந்தது முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது.

உலகளவில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து குறைவாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2025ஆம் ஆண்டின் பலவீனமான விளைவுகளைத் தொடர்ந்து வட்டாரப் பணவீக்கம் கணிசமாக உயரக்கூடும்.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளன.

இவ்வாண்டுக்கான அடிப்படைப் பணவீக்கம் சராசரியாக ஒரு விழுக்காட்டுக்கும் இரண்டு விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று ஆணையமும் அமைச்சும் ஏற்கெனவே முன்னுரைத்ததில் மாற்றம் இல்லை.

உலகளாவிய நிச்சயமற்ற போக்குகளுக்கு ஏற்ப பணவீக்க நிலவரம் அமையும் என்று அவை இரண்டும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்