சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Nov 2026 - 4:52 pm

2 mins read

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் அக்டோபரில் 1.5 விழுக்காடாகக் குறைந்தது.

சேவை, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் குறைந்ததால், அக்டோபரில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்தப் பணவீக்கம் சரிந்தது. சில்லறை விற்பனைப் பொருள்கள், பிற பொருள்களின் விலைகள் சற்று உயர்ந்தபோதும் இந்தச் சரிவு பதிவானது.

ஆண்டு அடிப்படையில் விலைவாசி கடந்த செப்டம்பரில் இருந்த 2 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காடாகக் குறைந்தது. சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட தரவுகளில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

மாத அடிப்படையில், அக்டோபரில் விலைவாசி மாற்றமின்றி இருந்தது. குடும்பச் செலவினத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்க, தனிமனிதர் போக்குவரத்து, தங்குமிடச் செலவு முதலியவை அடிப்படைப் பணவீக்கத்தில் சேர்க்கப்படுவதில்லை.

சேவை, மின்சாரம், எரிவாயு, தனிமனிதர் போக்குவரத்து ஆகியவற்றின் பணவீக்கம் குறைந்ததால், ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் முந்தைய மாதத்தின் 2.2 விழுக்காட்டிலிருந்து அக்டோபரில் 1.9 விழுக்காடாகச் சரிந்தது. மாத அடிப்படையில் இது 0.3 விழுக்காடு குறைந்தது.

கார்களின் விலை உயர்வு மிதமானதால், தனிமனிதர் போக்குவரத்துப் பணவீக்கம் செப்டம்பரின் 7.1 விழுக்காட்டிலிருந்து அக்டோபரில் 6.7 விழுக்காடாகக் குறைந்தது.

வீட்டு வாடகை உயர்வு செப்டம்பரைப் போலவே சீராக இருந்ததால், தங்குமிடப் பணவீக்கம் அக்டோபரில் 0.9 விழுக்காடாக நிலைத்திருந்தது.

விமானக் கட்டணங்கள், சுகாதாரக் காப்புறுதி, சுகாதாரச் சேவை ஆகியவற்றின் விலையேற்றம் குறைந்ததால், சேவைத் துறையைப் பொறுத்தவரை பணவீக்கம் செப்டம்பரின் 1.7 விழுக்காட்டிலிருந்து 1.1 விழுக்காடாகச் சரிந்தது.

அறைகலன் விலை உயர்ந்ததாலும் வீட்டு உபயோகப் பொருள்களின் விலைச் சரிவு மெதுவடைந்ததாலும், சில்லறை விற்பனைப் பொருள்கள், பிற பொருள்களுக்கான பணவீக்கம் முந்தைய மாதத்தின் 1.2 விழுக்காட்டிலிருந்து 1.6 விழுக்காடாக அதிகரித்தது.

சமைக்கப்படாத உணவுப்பொருள்களின் விலையேற்றம் மெதுவடைந்ததால், உணவுப் பணவீக்கம் செப்டம்பரின் 2.4 விழுக்காட்டிலிருந்து 2.3 விழுக்காடாகச் சற்றுக் குறைந்தது.

அக்டோபரில் மின்சாரச் செலவு மெதுவாக உயர்ந்ததால், மின்சாரம், எரிவாயுப் பணவீக்கம் செப்டம்பரின் 8.7 விழுக்காட்டிலிருந்து 1 விழுக்காடாய் மிகக் கடுமையாகச் சரிந்தது. செப்டம்பரைவிட அக்டோபரில் முறைப்படுத்தப்பட்ட மின்கட்டணம் குறைவாக இருந்ததே ஆண்டுக்கு ஆண்டு மின்சாரப் பணவீக்கச் சரிவுக்கு முக்கியக் காரணம்.

குறிப்புச் சொற்கள்