ஜூன் மாதத்தில் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் அதிகரிப்பு

ஜூன் மாதத்தில் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் அதிகரிப்பு

2 mins read
82d0d199-7416-4856-b8aa-37e67b00bea9
உணவுப் பொருள்கள், சில்லறை விற்பனைப் பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைத் துறைகளின் கட்டணங்கள் உயர்ந்ததே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.6 விழுக்காடாகச் சற்று அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மே மாதத்தில் அந்த விகிதம் 1.4 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.

உணவுப் பொருள்கள், சில்லறை விற்பனைப் பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைத் துறைகளின் கட்டணங்கள் உயர்ந்ததே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இணைந்து வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தியறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாகக் குடும்பங்களின் அன்றாடச் செலவினங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில், தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் விலக்கப்பட்டு அடிப்படைப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

அதே சமயம், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் மே மாதத்தில் இருந்த 1.8 விழுக்காட்டிலிருந்து ஜூன் மாதத்தில் 1.9 விழுக்காடாகக் கூடியுள்ளது. உயர்ந்த தங்குமிடச் செலவுகளும் அடிப்படை பணவீக்கமும் இதற்கு வழிவகுத்தன.

உணவுத் துறையின் பணவீக்கம் மே மாதத்தில் 1.8 விழுக்காடாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 2.1 விழுக்காடாக உயர்ந்தது. சமைக்கப்படாத உணவுப் பொருள்களின் விலையும் உணவு தொடர்பான சேவைகளின் கட்டணங்களும் வேகமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் ஆகும்.

சில்லறைப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களுக்கான பணவீக்கம் 1.7 விழுக்காடாகச் சற்று ஏறியது. குறிப்பாக அறைகலன்கள் மற்றும் பொழுதுபோக்குச் சாதனங்களின் விலை உயர்ந்தது. மேலும், விமானப் பயணக் கட்டணங்களும் விடுமுறைக் காலச் செலவுகளும் கூடின. இதன் காரணமாகச் சேவைத் துறையின் பணவீக்கம் 1.5 விழுக்காடாக அதிகரித்தது.

உலகளாவிய சந்தையில் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் உற்பத்திச் செலவும் போக்குவரத்துச் செலவும் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்