சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் மே மாதத்தில் நிலையாக இருந்தது

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் மே மாதத்தில் நிலையாக இருந்தது

2 mins read
89d451b8-0be8-4f69-b0f8-77843fde2608
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விலைகளில் ஏற்பட்ட பெரும் அதிகரிப்பு காரணமாக, தனியார் போக்குவரத்து பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.1 விழுக்காட்டிலிருந்து மே மாதத்தில் 8.6 விழுக்காடாக மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் மே மாதத்தில் 1.4 விழுக்காடு என நிலையாக இருந்தது.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

உணவு, சில்லறை வர்த்தகம், மற்றப் பொருள்களின் விலைவாசி அதிகரித்தபோதும் சேவைத் துறையின் பணவீக்கம் குறைந்ததால் அது ஈடுசெய்யப்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.

ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் முன்னுரைக்கப்பட்ட 1.6 விழுக்காட்டைவிட மே மாதத்தின் அடிப்படைப் பணவீக்க விகிதம் குறைவே.

பயனீட்டாளர் விலைக் குறியீட்டின்படி கணக்கிடப்படும் ஒட்டுமொத்தப் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தைப் போலவே 1.8 விழுக்காடாக இருந்தது. தனியார் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, சில்லறை வர்த்தகம், மற்றப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்ததே அதற்குக் காரணம். இருப்பினும், அதனைப் பெரும்பாலும் ஈடுகட்டியது சேவைத் துறையில் குறைவாகப் பதிவான பணவீக்கம்.

மாதாந்தர அடிப்படையில், தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்த முக்கியப் பொருள்களின் விலை மே மாதத்தில் 0.7 விழுக்காடு அதிகரித்தது.

“உலகளாவிய விநியோக நடவடிக்கைகளில் எரிசக்தி விலையேற்றத்தின் தாக்கம் காலதாமதமாகவே எதிரொலிக்கும். எனவே அது, காலப்போக்கில் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருள்களுக்கும் சேவைகளுக்குமான உற்பத்தி, போக்குவரத்துச் செலவுகளை உயர்த்தும் என்று கருதப்படுகிறது,” என்று ஆணையமும் அமைச்சும் தெரிவித்தன.

உலக அளவில் எரிசக்தி விலைகள் அண்மையில் சற்றுத் தணிந்தபோதிலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவை தொடர்ந்து அதிகமாகவே உள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, இவ்வாண்டில் அடிப்படைப் பணவீக்கமும் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் சராசரியாக 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாணய ஆணையத்தின் ஆண்டு முழுமைக்குமான முன்னுரைப்பு வரம்பிற்குள் இருக்கிறது.

எதிர்பார்த்ததைவிட மெதுவாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் மீண்டும் தொடங்குவது அல்லது வட்டார விநியோகச் சங்கிலிகளுக்கான முக்கிய இடைநிலை உள்ளீடுகளில் தொடரும் பற்றாக்குறை ஆகியவை சிங்கப்பூருக்கான இறக்குமதிச் செலவுகளை மேலும் உயர்த்தக்கூடும் என்று அந்த அமைப்புகள் கூறியதுடன், சாத்தியமான பாதகமான அபாயங்கள் குறித்தும் அவை எச்சரித்தன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பணவீக்கம்பொருளியல்வளர்ச்சி