சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் 1.2 விழுக்காடு அதிகரித்தது. அதற்கு முந்தைய மாதத்தில் அது 0.4 விழுக்காடாக இருந்தது.
இவ்வாண்டில் பதிவான விகிதத்தில் இதுவே ஆக அதிகமானது.
சேவைகள், உணவு, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றின் அதிகரித்த விலைகளால் மூலாதாரப் பணவீக்கம் அதிகரித்தது.
மின்சார, எரிவாயு விலைகள் சற்று சரிந்தன.
பல மாதங்களாக மூலாதாரப் பணவீக்கம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தது. கடந்த முறை, 2024 டிசம்பரில் அது ஒரு விழுக்காட்டைத் தாண்டியது. அப்போது மூலாதாரப் பணவீக்கம் 1.7 விழுக்காடாகப் பதிவானது.
மாதத்தின் அடிப்படையில், மூலாதார விலைகள் அக்டோபரில் 0.5 விழுக்காடு கூடின.
ஒட்டுமொத்த விலைவாசி, கடந்த மாதம் 1.2 விழுக்காடும் செப்டம்பரில் 0.7 விழுக்காடும் உயர்ந்தது. தனியார் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததே அதற்குக் காரணம்.
செப்டம்பர் மாதத்தில் 0.3 விழுக்காடாக இருந்த சேவைகளின் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 1.8 விழுக்காடாக அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 0.5 விழுக்காட்டுக்கும் ஒரு விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு அது 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இனிவரும் மாதங்களில் சிங்கப்பூரின் இறக்குமதி வரிகள் குறையும் என்பது போன்ற காரணங்களால் மூலாதாரப் பணவீக்கம் கணிக்கப்பட்ட வரையறைக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு அனைத்துலக கச்சா எண்ணெய் விலைகள் சரியும் என்று முன்னுரைக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் பயனீட்டாளர் தேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

