உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் பிற செலவினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் எதிர்பாராத விதமாகச் சரிவடைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அடிப்படை பணவீக்கம் 1.7 விழுக்காட்டிலிருந்து 1.4 விழுக்காடாகக் குறைந்தது.
புளூம்பெர்க் நிபுணர்களின் கணிப்பான 1.8 விழுக்காட்டு உயர்வைவிட இது குறைவாகும்.
குடும்பச் செலவுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்க தனியார் போக்குவரத்துச் செலவுகள், வசிப்பிடச் செலவுகள் ஆகியவை அடிப்படை பணவீக்கத்திலிருந்து விலக்கப்படுகிறது.
சேவைத் துறை, சில்லறை வர்த்தகம் மற்றும் இதர பொருள்களின் விலையேற்றம் மந்தமடைந்ததே இந்தச் சரிவுக்குக் காரணம் என சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில்துறை அமைச்சும் மே 25ஆம் தேதியன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
எனினும், ஏப்ரல் மாதத்தின் ஒட்டுமொத்த பணவீக்கம் மார்ச் மாதத்தைப் போலவே 1.8 விழுக்காடாகத் தொடர்கிறது. இறக்குமதிச் செலவினங்களுக்கான நெருக்குதல் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் மீண்டும் எச்சரித்துள்ளன.
எரிபொருள் மற்றும் கார் விலையுயர்வால் தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் 8.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விலையேற்றத்தின் தாக்கம், வரும் ஜூலை மாதம் தொடங்கும் 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் மட்டுமே பிரதிபலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சுகாதாரக் காப்புறுதிச் செலவுகள், தொலைத்தொடர்புச் சேவைகளின் விலைக் குறைவால் சேவைத் துறைப் பணவீக்கம் 1.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உணவுக்கான பணவீக்கம் எவ்வித மாற்றமுமின்றி 1.6 விழுக்காடாகவே நீடிக்கிறது.
வீட்டு வாடகை அதிகரிப்பால் தங்குமிடப் பணவீக்கம் 0.4 விழுக்காடாகச் சற்றே உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டின் ஒட்டுமொத்த மற்றும் அடிப்படை பணவீக்கம் சராசரியாக 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை இருக்கும் என்ற தங்களின் முந்தைய கணிப்பை சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் மாற்றமின்றித் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

