வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெற்றாலும், வட்டாரத்தில் அமைதியை உறுதிசெய்ய சிங்கப்பூர், வெற்றிபெற்ற அமெரிக்கத் தலைவருடன் இணைந்து செயல்படவேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியிருக்கிறார்.
பெய்ஜிங்கில் செப்டம்பர் 13ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் இங், “ஒவ்வொரு நாடும் அதன் சொந்தத் தற்காப்புப் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவேண்டும்; அமைதியைக் கட்டிக்காக்க, மற்றொரு நாட்டின் தலைவர் யாராக இருந்தாலும், வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவேண்டும்,” என்று கூறினார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற 11வது சியாங்ஷான் கருத்தரங்கிற்கு இடையே டாக்டர் இங் சிங்கப்பூர், சீன ஊடகங்களிடம் பேசினார்.
செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 வரை அவர் பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணம், தற்காப்பு அமைச்சர் என்ற முறையில் சீனாவுக்கு அவர் மேற்கொண்ட பத்தாவது பயணமாகும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
குடியரசின் ஆகாய, கடற்படைத் தளங்களை மேலும் 15 ஆண்டுகளுக்கு அமெரிக்க ராணுவம் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான உடன்படிக்கை ஒன்றை டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் நீட்டித்ததாக டாக்டர் இங் குறிப்பிட்டார்.
ஜனநாயக, குடியரசு அதிபர்களுடன் சிங்கப்பூர் செயல்பட்டுள்ளது.
“அதனால், அடுத்த அதிபர் யாராக இருந்தாலும், வேறுபாடுகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை,” என்றார் டாக்டர் இங்.


