தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

214,000 வேலைகளை உருவாக்கிய சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல்

2 mins read
2024ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மின்னிலக்கப் பொருளியல் 18.6 விழுக்காடு பங்களிப்பு
489314d0-1147-49bc-bd85-627d12f34255
சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுக்கான பெரும்பகுதி பங்களிப்புகள் தகவல் தொடர்பு அல்லாத துறைகளின் மின்னிலக்கமயமாக்கலில் இருந்து வந்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது. - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

2024ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியல் $12 பில்லியன் வளர்ச்சியடைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) $128.1 பில்லியன் (18.6 விழுக்காடு) பங்களித்தது. மேலும் அது 214,000 தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பு 2019ல் 14.9 விழுக்காட்டிலிருந்து 2023ல் 18 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் அறிக்கையின் மூன்றாவது பதிப்பின்படி, பெரும்பாலான வளர்ச்சி தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அல்ல, தொழில்நுட்பம் அல்லாத துறைகளின் மின்னிலக்கமயமாக்கலிலிருந்தே வந்துள்ளது.

மின்னிக்கப் பொருளியலை இரண்டு கூறுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை கணக்கிடுகிறது. முதலாவது தகவல் தொடர்புத் துறையின் மதிப்பு கூட்டல் அல்லது பொருளியல் பங்களிப்பு ஆகும். இது பொதுவாக தொலைத்தொடர்பு, கணினி, மென்பொருள் போன்ற தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய மின்னிலக்க சேவைகளை உள்ளடக்கியது.

இரண்டாவது, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளைத் தழுவுவதன் மூலம் மின்னிலக்கம் அல்லாத தொழில்கள் பெறும் மதிப்பு கூட்டல் ஆகும்.

சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுக்கான பெரும்பகுதி பங்களிப்புகள் தகவல் தொடர்பு அல்லாத துறைகளின் மின்னிலக்கமயமாக்கலில் இருந்து வந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

நிதி மற்றும் காப்புறுதித் துறை, இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது. அதைத் தொடர்ந்து மொத்த வர்த்தகம், உற்பத்தி ஆகியவை இருந்தன.

2024ஆம் ஆண்டில், உலகளவில் மற்றும் உள்நாட்டில் தொழில்நுட்பத் துறையின் மிகக் கவனமான பணியமர்த்தல் எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், சிங்கப்பூரில் தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை தொடர்ந்து விரிவடைந்து, 2023ல் 208,300லிருந்து 2024ல் 214,000 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது.

2024ஆம் ஆண்டில் மிக வேகமாக வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப வேலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவு, இணையப் பாதுகாப்பு தொடர்பான வேலைகள் அடங்கும்.

தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணியமர்த்துவதில் ஏற்பட்ட வளர்ச்சி முதன்மையாக தகவல் தொடர்பு அல்லாத துறைகளால் உந்தப்பட்டது. இது தொழில்நுட்ப வேலைகளில் 3.9 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டது. இது, தகவல் தொடர்புத் துறையில் 1.1 விழுக்காடு வளர்ச்சியைவிட அதிகமாகும்.

மின்னிலக்கத்தை ஏற்றுக்கொள்ளும் விகிதம் என்பது அளவிடப்பட்ட ஆறு மின்னிலக்க துறைகளில் குறைந்தது ஒன்றை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் விழுக்காட்டைக் குறிக்கிறது. இந்த போக்கு, 2023ல் 94.6 விழுக்காட்டிலிருந்து 2024ல் 95.1 விழுக்காட்டாக, அனைத்து நிறுவனங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆறு மின்னிலக்கத் துறைகளில் இணையப் பாதுகாப்பு, கிளவுட், மின்-கட்டணம், மின் வர்த்தகம், தரவுப் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு ஓர் அத்தியாவசிய கருவியாக வேகமாக மாறி வருவதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்