சிங்கப்பூரில் கடந்த பத்து ஆண்டுகளில் உள்ளூர் மருத்துவப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை கூடியுள்ளதால் மருத்துவ ஊழியரணியில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் விகிதம் குறைந்து கிட்டத்தட்ட 40 விழுக்காடாக நிலைபெற்றுள்ளது.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பி பணியாற்றும் சிங்கப்பூரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
நாட்டின் மருத்துவப் பராமரிப்பு சார்ந்த சேவைகளைச் சமாளிக்க உள்ளூர் மருத்துவ ஊழியரணி தொடர்ந்து வளர்ச்சியுற்று வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்து, 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 17,582 ஐ எட்டியுள்ளது.
மேலும், அதிகரித்த 50 விழுக்காடு மருத்துவர் எண்ணிக்கையில், பத்துப் பேரில் அறுவர் சிங்கப்பூரில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் மருத்துவ மன்றமும் எட்டு வெளிநாட்டு கல்விக் கழகங்களை மருத்துவத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்மையில் இணைத்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் அவற்றின் மொத்த எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், மருத்துவர்களுக்கான அதிகரித்து வரும் தேவையை நிறைவுசெய்வது இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அமைச்சும் மருத்துவ மன்றமும் குறிப்பிட்டிருந்தன.
இதற்கிடையே, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் எண்ணிக்கை விரிவடைந்ததன் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, சமூகம் மூப்படைந்து வருவதாலும், சுகாதாரப் பராமரிப்புக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரிப்பதாலும், மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் போக்கை எதிர்பார்ப்பதாகக் கூறியது.
நாடு தனது சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, “உள்ளூர் மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து வளப்படுத்தும் வேளையில், வெளிநாட்டில் பயிற்சி பெற்ற, சிறிய எண்ணிக்கையிலான வெளிநாட்டு மருத்துவர்களும் தேவை,” என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.


