சிங்கப்பூரின் உள்நாட்டு மறுபயனீட்டு விகிதம் 12 விழுக்காடாகத் தேக்கம்

சிங்கப்பூரின் உள்நாட்டு மறுபயனீட்டு விகிதம் 12 விழுக்காடாகத் தேக்கம்

2 mins read
992f9ebe-c0b3-42b1-81a1-5eb200861c9f
கடந்த பத்தாண்டுகளில் தனிநபர் உள்நாட்டுக் கழிவு 15 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு சிங்கப்பூரின் உள்நாட்டு மறுபயனீட்டு விகிதம், பத்து ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்தில் மிகக் குறைந்த அளவில் தேக்கம் கண்டது. வீசப்பட்ட அனைத்துக் குப்பைகளிலும் 12 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டன. இந்த விகிதம், 2022ல் இருந்ததைப்போல அதே அளவாகும்.

கடந்த ஆண்டு குடும்பங்கள் குறைவான அளவு குப்பைகளை வீசியபோதும், மறுபயனீட்டு விகிதம் குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 0.88 கிலோகிராம் குப்பைகளை வீசினர். 2022ல் இருந்த 0.9 கிலோகிராம், 2013ல் இருந்த 1.08 கிலோகிராம் எடையைவிட இது குறைவு.

சிங்கப்பூரின் உள்நாட்டு மறுபயனீட்டு விகிதம் பொதுவாக 20 விழுக்காடாக இருந்து வந்துள்ளது. ஆனால் 2022ல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அது குறைந்தது. குறைவான காகிதம், அட்டை, ஜவுளி, பதனிட்ட தோல் ஆகியவை மறுபயனீட்டுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.

‘கிளீன்என்வைரோ உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூர்’ நீடித்த நிலைத்தன்மை மாநாட்டுக்கு இடையே, தேசிய சுற்றுப்புற வாரியம் புதன்கிழமை (ஜூன் 19) 2023க்கான கழிவு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 72 விழுக்காடு குடும்பங்கள் பொருள்களை மறுபயனீடு செய்ததாக (2021ல் இது 64%) கடந்த ஆண்டு வாரியம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட போதிலும், உள்நாட்டு மறுபயனீட்டு விகிதம் குறைவாக இருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 2,180 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அலசப்பட்ட ஷாம்பூ அல்லது சலவைத்தூள் போத்தல்கள் போன்ற பொதுவான பொருள்களை மறுசுழற்சித் தொட்டிகளில் போடலாம் என்பதை 89 விழுக்காட்டினர் தெரிந்து வைத்திருந்தனர். ஒப்புநோக்க, 2021ல் இந்த விகிதம் 71 விழுக்காடாக இருந்தது.

எனினும், கூடுதலான குடும்பங்கள் பொருள்களை மறுபயனீடு செய்தாலும் கடந்த ஆண்டு மறுபயனீட்டு விகிதம் அதிகரிக்கவில்லை.

‘2024 சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம்’, ‘கிளீன்என்வைரோ உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூர்’ மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, சிங்கப்பூரின் உள்நாட்டு மறுபயனீட்டுச் சந்தை சிறியதாக இருப்பதால், மறுபயனீட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய மற்ற நாடுகளை சிங்கப்பூர் நம்பியுள்ளது என்றார். இது, சரக்குச் செலவுகள், பொருள்களின் விலைகள் போன்ற அம்சங்களைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

எனினும், குப்பைகளைக் குறைப்பதிலும் பொருள்களை மீண்டும் பயன்படுத்துவதிலும் நம்பிக்கையளிக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“சிங்கப்பூர் மக்கள்தொகையிலும் பொருளியலிலும் நிலையான வளர்ச்சி இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் தனிநபர் உள்நாட்டுக் கழிவு 15 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது.

“அதே காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வணிக, தொழிற்சாலை வளாகங்களால் ஏற்படுத்தப்பட்ட கழிவு, 30 விழுக்காடு குறைந்துள்ளது,” என்று அமைச்சர் ஃபூ மேலும் கூறினார்.

ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 6.86 மில்லியன் டன் கழிவு ஏற்படுத்தப்பட்டது. 2022ல் உற்பத்தியான 7.39 மில்லியன் டன் கழிவைவிட இது 7 விழுக்காடு குறைவு.

குறிப்புச் சொற்கள்