அமெரிக்க வரிவிதிப்புகள், வர்த்தகப் போர் ஆகியவற்றால் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரின் பொருளியல் மீள்திறன்மிக்க சவால்களை எதிர்நோக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதைவிட சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு இதுவரை கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு நடப்புக்கு வரும்போது சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்று ஆணையம் கூறியது. மேலும் வர்த்தகப் போர் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் இருப்பதால் இந்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025, 2026 ஆண்டுகளில் உலகளாவிய, உள்ளூர் பொருளியல் தொடர்ந்து நிச்சயமற்றதாக இருக்கும் என்று ஆணையம் கூறியது.
வரி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதால் பல நாடுகள் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் செயல்பாடு 2025ன் எஞ்சியுள்ள மாதங்களிலும் 2026ஆம் ஆண்டிலும் மெதுவடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழல் நிலவுகையில், சிங்கப்பூரின் வளர்ச்சி அடுத்த ஓராண்டில் மிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.
இருப்பினும், இவ்வாண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக இருந்ததால் 2025ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சி இதற்கு முன்பு முன்னுரைக்கப்பட்டதைவிட வலுவானதாக இருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூர் ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீதான தற்போதைய அமெரிக்க வரிவிதிப்பு 7.8 விழுக்காடாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இது 6.8 விழுக்காடாக இருந்தது. எஃகு, அலுமினியம் ஆகியவற்றுக்கான வரிகளை அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் இரு மடங்கு உயர்த்திய பிறகு சிங்கப்பூர் ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீதான வரிவிதிப்பு அதிகரித்துள்ளது.
எஃகு, அலுமினியம் ஆகியவை அமெரிக்காவுக்கு சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் 4.1 விழுக்காடாகும்.
தொடர்புடைய செய்திகள்
காலாண்டு அடிப்படையில் பொருளியல் 1.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
ஆண்டு அடிப்படையில் பொருளியல் 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
இதற்கு வர்த்தகத்துடன் தொடர்புடைய துறைகள் வளர்ச்சி கண்டதே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மின்னணுவியல் பொருள்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்தன.