மத்திய கிழக்குப் போரால் சிங்கப்பூர்ப் பொருளியல் மெதுவடையலாம்: கான்

மத்திய கிழக்குப் போரால் சிங்கப்பூர்ப் பொருளியல் மெதுவடையலாம்: கான்

2 mins read
7bf40e25-e896-4f47-9be8-f00463b6ab97
மத்திய கிழக்கு மோதல் நீடித்தால் சிங்கப்பூர்ச் சந்தைகளில் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்கில் தொடரும் பூசலால் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இனிவரும் காலாண்டுகளில் பெரும்பாலும் பாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

பணவீக்கமும் முன்னர்க் கணித்ததைவிட உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விநியோகத் தடங்கலும் எரிசக்தி, மூலப் பொருள்களின் விலையுயர்வும் பொருளியலில் எதிரொலிக்கும் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட திரு கான், அதன்மூலம் வணிக, போக்குவரத்துச் செலவுகளும் பயனீட்டாளர் விலைகளும் உயரக்கூடும் என்றார்.

அதன் விளைவாகத் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு, பொருளியல் வளர்ச்சி அனைத்துலக அளவில் மெதுவடையும்.

அந்த நெருக்கடியிலிருந்து சிங்கப்பூரால் முழுமையாகத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது என்றும் ஒருங்கிணைந்த, பல அமைப்புகளின் முயற்சிவழி மக்கள்மீதும் பொருளியல்மீதும் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கவேண்டும் என்றும் திரு கான் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஆறாவது வாரத்தை எட்டிய நிலையில், உயரும் எரிபொருள் விலைகளாலும் எரிசக்திக் கட்டணங்களாலும் சிங்கப்பூர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.

மோதல் இன்னும் நீடித்தால் சிங்கப்பூர்ச் சந்தைகளில் பணவீக்கம் இன்னும் அதிகரித்து இறக்குமதிச் செலவை உயர்த்தக்கூடும் என்றார் திரு கான்.

“மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், அன்றாடத் தேவைகளின் விலைகள் அதிகரிப்பதைக் குடும்பங்கள் உணரும். குறைந்த வருமானக் குடும்பங்கள் கூடுதல் பாதிப்பை உணரக்கூடும்,” என்று திரு கான் கூறினார்.

இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சார்ந்திருக்கும் உற்பத்தித் துறை நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும்.

வான்வழி, கடல் போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை விற்பனை, உணவுச் சேவைகள், தனியார் நிலப் போக்குவரத்து ஆகிய பல்வேறு துறைகள் நேரடிப் பாதிப்புகளை உணரும்.

வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், பொருளியல் மாற்றங்களை அமைச்சு கண்காணித்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்னுரைப்பை மே மாதம் முன்வைக்கும் என்றார்.

மார்ச் மாத நிலவரப்படி ஒவ்வொரு நாளும் ஹோர்முஸ் நீரிணையைக் கிட்டத்தட்ட ஆறு சரக்குக் கப்பல்கள்தான் கடந்துள்ளதாகச் சுட்டிய திரு கான், வழக்கமாக ஒரு நாளில் 135 சரக்குக் கப்பல்கள் அந்நீரிணை வழியாகச் செல்லும் என்றார்.

நிறுவனங்களும் குடும்பங்களும் எரிசக்தியைச் சேமிக்க தங்கள் பங்கை ஆற்றும்படியும் திரு கான் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்