உலகளாவிய வர்த்தகத் தடங்கல்கள், ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வு போன்ற சவால்களை முறியடித்து சிங்கப்பூரின் பொருளியல் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த வலுவான பொருளாதார வளர்ச்சி, பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சியிருக்கிறது.
இதையடுத்து வர்த்தக, தொழில் அமைச்சின் முன்னுரைப்பு 2 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரையிலான வளர்ச்சி என்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கில் அண்மையில் தீவிரமடைந்துள்ள மோதல்கள், அந்தப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் இன்னும் நீடிப்பதையே காட்டுகின்றன.
எரிசக்தி விலை அதிகரிப்பையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சிக்கான பிற அபாயங்களில் அமெரிக்காவின் வரிகளும் அடங்கும்.
அமெரிக்காவின் வரி விதிப்புகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிய காரணங்களின்கீழ் இந்த வரிகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, உணவு விலைகளை உயர்த்தக்கூடும் என்று அஞ்சப்படும் எல்-நினோ வானிலை மாற்றமும் மற்றொரு அபாயமாக உள்ளது.
சிங்கப்பூர் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, ஒரு நல்ல வேகமான வளர்ச்சி என்றாலும், இதற்கு முந்தைய காலாண்டின் 6.3 விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவு.
பொருளியல் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வேகத்தால் உற்சாகமடைந்து தங்களது முழு ஆண்டு கணிப்பை உயர்த்திய பகுப்பாய்வாளர்களில் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் ஆசியான் பொருளாதார நிபுணர் காய் வெய் ஆங்கும் ஒருவர்.
அவர், தற்போது 2026ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கிறார். இது, அவரது முந்தைய கணிப்பான 3.4 விழுக்காட்டைவிட கூடுதலாகும். மேலும், வர்த்தக, தொழில் அமைச்சும் தனது கணிப்பை 3.5 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு என்ற வரம்பிற்கு உயர்த்தும் என்றும் அவர் நம்புகிறார்.
ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுராவின் பொருளாதார நிபுணர் இயுபென் பராகுயெல்லஸும் , முழு ஆண்டு வளர்ச்சிக்குத் தான் ஏற்கெனவே கணித்திருந்ததைவிட 4.6 விழுக்காட்டையும் தாண்டி மேலும் சாதகமான வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

