சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி ஜூலை மாதம் 24.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தேவை வலுவாகத் தொடர்ந்ததன் காரணமாக ஜூன் மாதத்தின் 20.8 விழுக்காட்டு வளர்ச்சி மேலும் விரிவடைந்ததாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியிட்ட அறிக்கையில் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், புளூம்பெர்க் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் கணித்ததைக் காட்டிலும் ஜூலை மாத ஏற்றுமதி வளர்ச்சி குறைவு.
அவர்கள் 26.2 விழுக்காட்டு வரையிலான வளர்ச்சியை எதிர்பார்த்தார்கள்.
எண்ணெய்த் துறை உள்ளடங்காத மொத்த ஏற்றுமதியில் மின்னணுத் துறைதான் ஆக அதிகமாக 112 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அந்த வளர்ச்சிக்கு வட்டு ஊடகத் தயாரிப்புகளின் மிதமிஞ்சிய ஏற்றுமதி கைகொடுத்தது. ஆக அதிகமாக 339.1 விழுக்காடு அதிகமாக அந்தத் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அதேபோல, கணினி ஏற்றுமதியும் 120.8 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
மின்னணுத் துறையை விலக்கிவிட்டுக் கணக்கிட்டால் ஏற்றுமதி வளர்ச்சி 2.3 விழுக்காடு குறைவு என்கிறது எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்.
மருந்தியல் துறை ஜூலை மாதம் 56.7 விழுக்காடு சுருங்கியதே அதற்கு முக்கியக் காரணம். பெட்ரோகெமிக்கல் பிரிவு 22.5 விழுக்காடும் உணவுத் தயாரிப்புகளின் ஏற்றுமதி 22.5 விழுக்காடும் வீழ்ச்சி கண்டன.
உலக அளவிலான எண்ணெய் சாராத ஏற்றுமதிச் சந்தையில் அமெரிக்கா, சீனா, தைவான் ஆகியன வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளன.
இந்த ஆண்டில் எண்ணெய் சாரா ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் 14 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை இருக்கும் என கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) வெளியிட்ட அறிக்கையில் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு குறிப்பிட்டிருந்தது.
இரண்டாம் காலாண்டில் 27.4 விழுக்காடு வளர்ச்சி பதிவானதைத் தொடர்ந்து ஆண்டு முழுமைக்குமான கணிப்பை அது அதிகரித்தது.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு விரிவாக்கத்தால் மின்னணுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்ததால் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பதிவானது.
அந்த வளர்ச்சி விகிதம் முதலாம் காலாண்டில் 9.6 விழுக்காடாக இருந்தது. வளர்ச்சி விகிதம் ஏறுமுகத்தில் பதிவானதன் அடிப்படையில் இவ்வாண்டில் ஏற்றுமதி 14 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை வளர்ச்சி காணலாம் என அந்த அரசாங்க அமைப்பு குறிப்பிட்டிருந்தது.


