சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி, இவ்வாண்டு (2025) அக்டோபரில் எதிர்பார்ப்பைக் காட்டிலும் வெகுவாய் உயர்ந்துள்ளது. மின்னணு, மருந்தாக்கத் துறைகள் கண்ட வலுவான வளர்ச்சியின் காரணமாக அது சாத்தியமானது.
உற்பத்தித் துறை, ஆண்டு அடிப்படையில் 29.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 6.7 விழுக்காட்டைக் காட்டிலும் அது மிகவும் அதிகம். பொருளியல் வளர்ச்சிக் கழகம், புதன்கிழமை (நவம்பர் 26) வெளியிட்ட தரவுகளில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்து, உற்பத்தி அக்டோபரில் 15.8 விழுக்காடு கூடியது.
மாதாந்தர அடிப்படையில், உற்பத்தி 11.5 விழுக்காடு அதிகரித்தது. உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது, வளர்ச்சி 11.7 விழுக்காடாக இருந்தது.
ஆண்டு அடிப்படையில் அத்துறையின் உற்பத்தி 89.6 விழுக்காடு உயர்ந்தது. செப்டம்பரில் வளர்ச்சி, 45.6 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
மருந்தாக்கத் துறையின் உற்பத்தி 122.9 விழுக்காடு பெருகியது. மருத்துவத் தொழில்நுட்பத் துறை 7.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது. மருத்துவச் சாதனங்களுக்கு வெளிநாடுகளில் தொடர்ந்து தேவை அதிகரித்ததே அதற்குக் காரணம்.
மின்னணுத் துறையின் உற்பத்தி 26.9 விழுக்காடு உயர்ந்தது. ஒட்டுமொத்தத் தொழிற்சாலை உற்பத்தியில் அந்தத் துறையின் பங்கு, ஏறக்குறைய 35 விழுக்காடு.
சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் மின்னணுப் பொருள்களில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை பகுதிமின்கடத்திகள். அவற்றின் உற்பத்தி 17 விழுக்காடு பெருகியது. தகவல்தொடர்பு, பயனீட்டாளர் மின்னணுத் துறையின் வளர்ச்சி 155.6 விழுக்காடு கூடியது.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபரில் அதிக வளர்ச்சி கண்ட மற்றொரு துறை, போக்குவரத்துப் பொறியியல். ஆண்டு அடிப்படையில் அது 29.5 விழுக்காடு உயர்வை எட்டியது.
வான்வெளித் துறை 50.6 விழுக்காடு விரிவடைந்தது. விமான உதிரிபாகங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டதும் உயர்தரப் பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும் அதற்கு முக்கியக் காரணங்கள்.
கடல்துறை சார்ந்த பொறியியல் துறை ஏழு விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
துல்லியப் பொறியியல் துறையின் உற்பத்தி 12.2 விழுக்காடு அதிகரித்தது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம், செப்டம்பர் மாதத்திற்கான தொழிற்சாலை உற்பத்தியையும் திருத்தியுள்ளது. முன்பு தெரிவிக்கப்பட்ட வளர்ச்சி விகிதமான 16.1 விழுக்காட்டை அது 16.2 விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளது.

