சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி, 2025 டிசம்பரில் சற்றே அதிகரித்தது. இது, 2026ல் நம்பிக்கையான கண்ணோட்டத்தைத் தருகிறது.
சிங்கப்பூர்க் கொள்முதல், மூலப்பொருள்கள் நிர்வாகக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட தரவின்படி, ஒட்டுமொத்த உற்பத்தித் துறைக்கும் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இது விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
சிங்கப்பூர் கொள்முதல் நிர்வாகிகள் (பிஎம்ஐ) குறியீடு, டிசம்பரில் 50.3க்குக் கூடியது. நவம்பரில் இது 50.2ஆக இருந்தது.
குறியீடு 50க்கும் மேல் இருந்தால், இது வளர்ச்சியைக் குறிக்கும். 50க்குக் குறைவாக இருந்தால் இது சுருக்கத்தைச் சுட்டும்.
சிங்கப்பூரின் வலுவான பிஎம்ஐ குறியீடு, வட்டாரத்தில் நிலவும் போக்கை வெளிப்படுத்துகிறது. டிசம்பரில் முக்கியப் பொருளியல்களின் தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்தது.
டிசம்பரின் நம்பிக்கையளிக்கும் பிஎம்ஐ குறியீட்டுக்கு மின்னணுத் துறையின் செயல்பாடு முக்கியக் காரணம். இது, தொழிற்சாலை உற்பத்தியில் ஏறக்குறைய 40 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
மின்னணுத் துறைக்கான பிஎம்ஐ குறியீடு 0.3 புள்ளி உயர்ந்து 50.9ஆகப் பதிவானது. இத்துறை தொடர்ந்து ஏழாவது மாதமாக வளர்ச்சி கண்டு வருவதை இது குறிக்கிறது.
2025 கடைசிக் காலாண்டில் சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி கூடியதால், சிங்கப்பூர்ப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட ஆண்டு முழுவதுமாக 4.8 விழுக்காடு வளர்ச்சிக் கண்டது.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக, தொழில் அமைச்சு முன்கூட்டியே வெளியிட்ட மதிப்பீடுகளின்படி, 2025 இறுதிக் காலாண்டில் பொருளியல் ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. மூன்றாம் காலாண்டில் இந்த வளர்ச்சி 4.3 விழுக்காடாக இருந்தது.

