சிங்கப்பூரின் முதல் ஆடை அலங்கார அணிவகுப்பு

சிங்கப்பூரின் முதல் ஆடை அலங்கார அணிவகுப்பு

2 mins read
9d51d730-2733-4e30-8428-18f8f2f23f39
சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, இந்தியா, சுவீடன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 40 ஆடை அலங்கார நிறுவனங்கள் ஐந்து நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. - படம்: ஓஆர்எஃப்டபிள்யூ
Google News Preferred Icon

சிங்கப்பூர் முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தும் ஆடை வடிவமைப்பாளருக்கான ஆடை அலங்கார நிகழ்ச்சி, இம்மாதம் 12ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை ‘ஸ்கேப்’ (*Scape) இளையர் மையத்தில் நடைபெறுகிறது.

‘ஆர்ச்சர்ட் ரோட் ஃபேஷன் வீக்’ எனும் அந்த ஐந்து நாள் நிகழ்ச்சியில் சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, இந்தியா, சுவீடன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

‘ஸ்கேப் கிரவுண்ட் தியேட்டரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தங்கள் வடிவமைப்புகளை நிறுவனங்கள் காட்சிப்படுத்தவிருக்கின்றன. தனிநபர், குழு நிகழ்ச்சிகள் என மொத்தம் 25 மேடை பவனிகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வு, ‘ஆர்ச்சர்ட் ரோட் ஃபேஷன்’ குழுவினரின் சிந்தனையில் உதித்ததாகும்.

மேண்டரின் கேலரிக்கும் எச்&எம் நிறுவனத்திற்கும் இடையே சாலையைக் கடந்து செல்லும் சிறந்த ஆடை அணிந்த மனிதர்களின் படங்ளைப் பதிவிடும் குழு இதன் பின்னணியில் உள்ளது.

‘ஆர்ச்சர்ட் ரோடு ஃபேஷன்’ நிறுவனரும் ‘ஓஆர்எஃப்டபிள்யூ’வின் நிர்வாகியுமான ஸ்கை அல்ஃபோன்சோ, இந்த நிகழ்வு ஆறு இலக்கத் தொகை முதலீட்டில் உருவாகவிருப்பதாகத் தெரிவித்தார்.

“அரங்கம், தயாரிப்பு, மேடை, தொழில்நுட்பத் தேவைகள், தலைமுடி, முக ஒப்பனை மற்றும் விளம்பர அழகிகள் உள்ளிட்டவற்றுக்கு நாங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறோம். வடிவமைப்பாளர்கள் தங்கள் உடைகளை உருவாக்குவதிலும் அவற்றைச் சிங்கப்பூரில் காட்சிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால் போதும்,” என்றார் அவர்.

உலகின் ஃபேஷன் தலைநகரங்களில் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் பிரம்மாண்ட ஃபேஷன் வாரங்களுக்கு மத்தியில் உள்ளூர் அளவில் இந்நிகழ்வுக்கு ஓஆர்எஃப்டபிள்யூ ஏற்பாடு செய்கிறது.

பாரிஸ், மிலான் நகரங்களைப் போலவே இதுவும் முழு ஆடை அலங்கார அணிவகுப்பாக இருக்கும். விளம்பர அழகிகள் ஒவ்வொருவராக நடந்து வந்த பிறகு இறுதியில் ஆடை வடிவமைப்பாளர் மேடையில் வந்து வணங்குவார்.

“இவ்வட்டாரத்தில் சிங்கப்பூரின் ஆடை வடிவமைப்புத் துறையை மேம்படுத்தவும் சிங்கப்பூரிலும் ‘ஃபேஷன் வீக்’ உள்ளது என்பதைக் காட்டவும் நாங்கள் விரும்புகிறோம்.

“இளம் வடிவமைப்பாளர்கள் தங்கள் உடைகளைக் காட்சிப்படுத்தவும், புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்நிகழ்ச்சி ஒரு தளமாக இருக்கும்,” என்றார் ஸ்கை அல்போன்சோ.

“அதே வேளையில், புதிதாக உருவாகி வரும் அல்லது ஏற்கெனவே புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் தங்கள் தாய்நாட்டைத் தாண்டி வெளிநாடுகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்