கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த புக்கிட் பாத்தோக் நூலகம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மீண்டும் திறக்கப்பட்டது
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலகத்தைத் திறந்துவைத்தார்.
முன்பு வெஸ்ட் மால் கடைத்தொகுதியின் மூன்றாம் தளத்தில் செயல்பட்டுவந்த புக்கிட் பாத்தோக் நூலகம், தற்போது மூன்று தளங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், நூலகத்தில் இடவசதி முன்பைவிட இருமடங்கு அதிகமாகியுள்ளது.
“புதுப்பிக்கப்பட்ட நூலகம் இளைய வாசகர்களுக்குப் புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்துகிறது. அதே வேளையில் வாசிப்புக்கும், கற்றலுக்கும் ஏற்ற இடங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது,” என்று மூத்த நூலகர் ரேணு சிவா கூறினார்.
நூலகத்தின் சிறப்பம்சமாக ‘சிங்லேண்ட் ஒலி உலகம்’ எனும் புதிய ஒலி அனுபவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நூலக வாரியம் முதன்முறையாக ஒலியைப் பயன்படுத்தி வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்நூலகத்தில்தான் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாசகர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒலிக்குகையும் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தின் வரலாற்றையும் காலக் குகைகள்வழி அறிந்துகொள்ளலாம். மக்களைப் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுவிக்கும் ஒரு சூழலை அமைக்கும் நோக்குடன், இந்த முழு நூலகமும் ‘புகலிடம்’ என்னும் கருப்பொருளுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
‘லிட்டில் குயிலின்’ பூங்காவால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம், வாசகர்கள் அமைதியான சூழலில் வாசிக்கவும் புத்துணர்ச்சி பெறவும் உதவும்.
புதுப்பிக்கப்பட்ட நூலகத்தில் மக்கள் புத்தகங்களை எளிதில் தேடி எடுத்து இரவல்பெற உதவும் வகையில் தொழில்நுட்ப வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தகங்களின் குறியீட்டை வருடி, அது தொடர்பான பிற புத்தகங்களையும் மின்னூல்களையும் உடனடியாகத் திரையில் காணலாம். நூலக அதிகாரிகள் பரிந்துரைக்கும் ஒலிநூல்களையும் வாசகர்கள் தங்கள் கைப்பேசி மூலம் வருடி, அதைக் கேட்டு மகிழலாம்.
நூலகத்தின் அமைதியான சூழலில் படிக்கவோ வேலை செய்யவோ விரும்புவோர் இனி இரவு 10 மணிவரை அங்குள்ள கற்றல், பல்லூடகப் பகுதியிலுள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை நூலகத்தின் மூன்று தளங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

