பயன்பாட்டில் இல்லாத எம்ஆர்டி ரயில் ஒன்று ஹோட்டலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஹோட்டல் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
ரயிலின் உட்புறம் மாற்றி அமைக்கப்படவில்லை. அங்கே, ரயிலின் ஆரம்பகாலப் பயணங்களைக் காட்டும் காணொளிகள் திரையிடப்படும்.
இந்த ஹோட்டலில் தங்க விரும்புவோர் இவ்வாண்டின் பிற்பாதியிலிருந்து பதிவுசெய்துகொள்ளலாம்.
Train Pod@one-north என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டலில் எட்டு அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையின் பரப்பளவு ஏறத்தாழ 7.5 சதுர மீட்டர்.
மூன்றாம் தலைமுறை கவாசாக்கி-நிப்போன் ஷார்யோ C751B ரயில் வகையைக் கொண்டு புதிய ஹோட்டல் உருவாக்கப்பட்டுள்ளது,
இந்த வகை ரயில்கள் 2000ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் சேவை வழங்கின.
இந்த எம்ஆர்டி ரயில் ஹோட்டலை வர்த்தக, தொழில் மற்றும் கலாசார, சமூக, இளையர்த்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வோர் அறையும் குளிர்சாதன வசதியுடன் இருக்கும். இரண்டு விருந்தினர்கள்வரை ஓர் அறையில் தங்கலாம். அறையில் ஈரடுக்குக் கட்டிலும் கழிவறையும் இருக்கும்.
ரயில் ஹோட்டலுக்கு வெளியிலும் விருந்தினர்களுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
உணவு, பான விற்பனை இயந்திரம், காசு போட்டு இயக்கப்படும் சலவை இயந்திரம், துணிகளை உலர வைக்கும் இயந்திரம், வெளிப்புற சமையலறை, குளிர்பதனப் பெட்டி ஆகியவற்றை ஹோட்டல் விருந்தினர்கள் பயன்படுத்தலாம்.
வெளிப்புறத்தில் அமர்ந்து உணவருந்தவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதற்காக எம்ஆர்டி ரயில் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. மிதிவண்டி நிறுத்திவைக்கும் இடமும் உள்ளது.
வாரநாள்களில் ஹோட்டல் அறைகளின் விலை ஏறத்தாழ $80லிருந்து $90 வரை இருக்கும். வார இறுதியில் ஹோட்டல் அறைகளின் விலை ஏறத்தாழ $100லிருந்து $120 வரை இருக்கும்.
இந்தக் குறிப்பிட்ட ரயில், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் போக்குவரத்துச் சேவை வழங்கும் ரயில் பட்டியலிருந்து நீக்கப்பட்டது.
அதன்பின், அது புதிய உள்ளூர் நிறுவனமான ‘டைனி போட்’டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஜேடிசி கார்ப்பரேஷனின் ஆதரவுடன் புதிய ரயில் ஹோட்டலை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏம்ஆர்டி ஹோட்டலுக்கான புதுப்பிப்புப் பணிகளுக்குக் கிட்டத்தட்ட $300,000 செலவானது. புதுப்பிப்புப் பணிகள் ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு நடைபெற்றன.
Train Pod@one-north தற்காலிகமானது என்றும் தற்போது பொருத்தப்பட்ட இடத்தில் அது ஏழாண்டுகளுக்கு மட்டுமே இருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.