சாஃப்ரா தெம்பனிசில் சிங்கப்பூரின் முதலாவது மொட்டை மாடி பந்தடிப்பு பயிற்சிக்கூடம்

சாஃப்ரா தெம்பனிசில் சிங்கப்பூரின் முதலாவது மொட்டை மாடி பந்தடிப்பு பயிற்சிக்கூடம்

2 mins read
10a11e58-4211-4b2e-b4da-bfbe2158afbf
அர்பனைட்சின் ஐபேட், பேஸ்பால், மென்பந்து விளையாட்டுகளுக்கான தானியங்குப் பாதைகளைக் கொண்டுள்ளது. - படம்: ஐபேட்
Google News Preferred Icon

அடுத்த கட்டத்திற்கு முன்னேற விரும்பும் மென்பந்து (சாஃப்ட்பால்), ‘பேஸ்பால்’ விளையாட்டாளர்களுக்கு, பந்தடிப்பு (பேட்டிங்) பயிற்சி செய்ய இப்போது மற்றோர் இடம் கிடைத்துள்ளது.

சிங்கப்பூரின் முதலாவது மொட்டைமாடி பந்தடிப்பு பயிற்சிக் கூடமான, அர்பனைட்சின் ‘ஐபேட்’, சாஃப்ரா தெம்பனிசில் திறக்கப்பட்டுள்ளது. இதில் தானியங்கி பேஸ்பால், மென்பந்து ஆடுகளங்கள் இடம்பெற்றுள்ளன என அந்நிறுவனம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அறிவித்தது.

சாஃப்ரா தெம்பனிசின் டென்னிஸ், ‘பிக்கல்பால்’ கூடங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் திறந்தவெளி வசதி, முதல் முறை விளையாடுபவர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என இரு தரப்பினருக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் சரிபார்த்ததில், சிங்கப்பூரில் உள்ள ஒரேயொரு பொது பந்தடிப்பு பயிற்சிக் கூடம், ‘தி கேஜ்’ நிறுவனத்தின் டெம்ப்சி கிளையில் இயங்குவது மட்டுமே என்பது தெரியவந்துள்ளது.

ஐபேட் நிறுவனர் ஜூலியன் வோங், தனது பயிற்சிக் கூடத்தின் திறப்பு விழா, மேலும் பலரை இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்.

“யாராவது அந்தத் தருணத்தை ரசித்துவிட்டுச் சென்றாலோ, ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற அல்லது மீள்சக்தி பெற ஒரு புதிய வழியைக் கண்டறிந்தாலோ அல்லது இனி அறிமுகமில்லாத ஒரு விளையாட்டைக் கண்டறிந்தாலோ, அப்போது நாங்கள் செய்ய நினைத்ததைச் சாதித்துவிட்டோம்,” என்று அவர் கூறினார்.

தகுதிபெற்ற பயிற்றுவிப்பாளர்களுடனான ஒத்துழைப்பு மூலம், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கான பயிற்சி, வழிகாட்டுதல் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக ஐபேட் தெரிவித்தது.

மேலும் பலர் பேஸ்பால், மென்பந்து விளையாட்டுகளை முயற்சி செய்து பார்க்க முடியும் என்பதாலும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ள மற்றொரு களம் என்பதாலும், இந்த வசதி திறக்கப்படுவதை விளையாட்டுத் துறையினர் வரவேற்றுள்ளனர்.

சிங்கப்பூர் பேஸ்பால், மென்பந்துச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் சியா மியன், “இந்தக் கூடத்தின் திறப்பு விழா, சிங்கப்பூரர்களிடையே இவ்விரு விளையாட்டுகளுக்கும் வளர்ந்து வரும் மதிப்பையும், புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் காட்டுகிறது,” என்றார்.

ஐபேட் நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் பங்கேற்பாளர்கள் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
தானியங்கிபயிற்சிசாஃப்ரா