தமிழ் பேசத் தெரிந்திருந்த சிங்கப்பூரின் இரண்டாம் அதிபர்

தமிழ் பேசத் தெரிந்திருந்த சிங்கப்பூரின் இரண்டாம் அதிபர்

2 mins read
b78ef04a-1316-4000-8855-249629c1c818
சிங்கப்பூரின் இரண்டாம் அதிபர் பெஞ்சமின் ஷியர்சுக்குத் தமிழ் பேச தெரியும் என்ற தகவல் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் இடம்பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதுவரை சிங்கப்பூரின் முதல் தமிழ் பேசும் அதிபர் திரு தேவன் நாயர் என்று நம்பி வந்தோருக்கு வியப்பூட்டும் புதிய தகவல்.

உண்மையில், அவருக்குமுன் அதிபராக இருந்த திரு பெஞ்சமின் ஷியர்சுக்குத் தமிழ் தெரியும் என்பது 2025ல் வெளிவந்த அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பெஞ்சமின் ஷியர்சின் கதை: முன்னோடி மகப்பேற்று மருத்துவரிலிருந்து சிங்கப்பூர் அதிபர்’ என்ற திரு பெஞ்சமின் ஷியர்சின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்ற ஆண்டு வெளியானது.
‘பெஞ்சமின் ஷியர்சின் கதை: முன்னோடி மகப்பேற்று மருத்துவரிலிருந்து சிங்கப்பூர் அதிபர்’ என்ற திரு பெஞ்சமின் ஷியர்சின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்ற ஆண்டு வெளியானது. - படம்: தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் – யூசோப் இஷாக் கல்விக்கழகம்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் முன்னாள் மூத்த சட்டச் செய்தியாளர் திரு கே.சி.விஜயன், 'பெஞ்சமின் ஷியர்சின் கதை: முன்னோடி மகப்பேற்று மருத்துவரிலிருந்து சிங்கப்பூர் அதிபர்’ என்ற அந்த ஆங்கில நூலை எழுதியுள்ளார்.

நூல் குறித்த எழுத்தாளருடனான உரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜூன் 3) தேசிய நூலகத்தில் நடந்தது.

நூலின் முன்னுரையில் திரு ஷியர்ஸ் ‘எளிய தொடக்கங்கள் கொண்ட தமிழ் பேசும் யூரேசியர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேய ஆட்சியின்கீழ் இந்தியா இருந்தபோது திரு பெஞ்சமின் ஷியர்சின் தாத்தா ஆங்கில ராணுவ வீரராக, முன்பு கண்ணனூர் என்று அழைக்கப்பட்ட மெட்ராசில் சேவையாற்றினார்.

அவர் அங்கு மற்றொரு ராணுவ வீரரின் மகளைத் திருமணம் செய்தபின், அவர்கள் திரு பெஞ்சமின் ஷியர்சின் தந்தையான திரு எட்வர்ட் ஹென்றி ஷியர்சைப் பெற்றெடுத்தனர்.

திரு எட்வர்ட் தமது குழந்தைப் பருவத்தைக் கண்ணனூரில் கழித்ததால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்க அதிக வாய்ப்புள்ளதென நம்பப்படுகிறது.

தமது பதின்ம வயதில் பினாங்குக்குக் குடிபெயர்ந்த அவர், 1902ஆம் ஆண்டு திரு பெஞ்சமின் ஷியர்சின் அம்மா, லிலியன் ஜேன் கோமெசைத் திருமணம் செய்துகொண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.

அந்த இணையர்க்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் திரு பெஞ்சமின் ஷியர்ஸ் இரண்டாமவர்.

“திரு எட்வர்டுக்கு முன்பே தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தாலும், அவர் பொதுப்பணித் துறையில் மேற்பார்வையாளராக லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்தில் பணியாற்றியபோது, அவரது கண்காணிப்பில் பல தமிழர்கள் வேலை பார்த்ததாக திரு பெஞ்சமின் ஷியர்சின் மகன் திரு ஜோசப் ஷியர்ஸ் என்னிடம் பகிர்ந்துகொண்டார்,” என்று கூறினார் திரு விஜயன்.

“ஊழியர்களுடனான நல்லுறவை வளர்க்க திரு எட்வர்ட் தமது தமிழ்ப் புலமையை வளர்த்துக் கொண்டதாகவும் திரு பெஞ்சமினுக்கும் அவர் தமிழ் கற்பித்ததாகவும் திரு ஜோசப்புடனான நேர்காணலில் கேட்டறிந்தேன்,” என்றார் அவர்.

இந்த நூலை எழுத தாம் ஒரு செய்தியாளர் கண்ணோட்டத்தைத் தேர்ந்தெடுத்ததாக திரு விஜயன் பகிர்ந்துகொண்டார்.

திரு பெஞ்சமின் ஷியர்சின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பலமுறை கண்டு பேசி அறிந்தவற்றை அவர் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த சட்டச் செய்தியாளர் கே.சி.விஜயன் இந்நூலை எழுதியுள்ளார்.
முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த சட்டச் செய்தியாளர் கே.சி.விஜயன் இந்நூலை எழுதியுள்ளார். - படம்: சாவ்பாவ்

திரு பெஞ்சமின் ஷியர்சின் எளிய குடும்பச் சூழல், கல்விப் பயணம், மகளிர், மகப்பேறு மருத்துவத்துறையில் அவர் முன்னோடியாக மாறியது, பின்னர் அதிபர் பதவிக்கு முன்னேறியது என அவரது வாழ்க்கைக் கதையை அவரைச் சார்ந்தோரின் நினைவுகள் எனப் பல்வேறு தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலைத் தென்கிழக்காசிய – யூசோப் இஷாக் ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்