மரீன் பரேடில் சிங்கப்பூரின் முதல் நிலத்தடி மூத்தோர் பராமரிப்பு நிலையம்

மரீன் பரேடில் சிங்கப்பூரின் முதல் நிலத்தடி மூத்தோர் பராமரிப்பு நிலையம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Nov 2026 - 9:21 pm

2 mins read

மரீன் பரேடில் வசிக்கும் மூத்தோர் புதிய திறன்களைக் கண்டறியவும் மகிழ்ச்சியாக இருக்கவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘மான்ட்ஃபோர்ட் கேர்’ அமைப்பின் சிங்கப்பூரின் முதல் நிலத்தடி மூத்தோர் பராமரிப்பு நிலையம் புதன்கிழமை (நவம்பர் 25) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

குட்லைஃப் ஸ்டுடியோ (பிளே@அண்டர்கிரவுண்ட்) என்ற அந்த நிலையத்தில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட எட்டுப் பிரிவுகள் உள்ளன.

நிலத்தடி நிலையத்தில் தமது கதைகளைப் பதிவு செய்கிறார் 70 வயது ஜான் யெட்.
நிலத்தடி நிலையத்தில் தமது கதைகளைப் பதிவு செய்கிறார் 70 வயது ஜான் யெட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்தோர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் நிழற்படம் எடுக்கவும் தங்களின் கதைகளை உரையாடலாகப் பதிவு செய்யவும் ஒப்பனை மூலம் புதிய தோற்றத்தைப் பெறவும் முடியும். ‘ஏஐ’ இயந்திரம் மூலம் உடல் அமைப்பைச் சோதிப்பதோடு, சிங்ஹெல்த் சமூக சுகாதார நிலையத் தாதியிடம் ஆலோசனையும் பெறலாம்.

நிலத்தடி நிலையத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடியவை. மூத்தோரின் கருத்துகளின் அடிப்படையில் மான்ட்ஃபோர்ட் கேர் அமைப்பால் இங்குள்ள அனுபவங்களையும் சேவைகளையும் மாற்ற முடியும்.
நிலத்தடி நிலையத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடியவை. மூத்தோரின் கருத்துகளின் அடிப்படையில் மான்ட்ஃபோர்ட் கேர் அமைப்பால் இங்குள்ள அனுபவங்களையும் சேவைகளையும் மாற்ற முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘தி ஆங்கர்@மரீன் பரேட்’ நிலத்தடி நிலையத்தின் ஒரு பகுதியாக 450 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் புதிய நிலையம் அமைந்துள்ளது. ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான ஆரம்ப முதலீட்டில், மான்ட்ஃபோர்ட் கேர், லியன் அறநிறுவனத்தின் சமப் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் ஆதரவில் இந்நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுதும் மற்றவர்களுக்காக உழைத்த மூத்தோர் தங்களின் கனவுகளை நனவாக்க இந்நிலையம் உதவும் என்று தொடக்க விழாவில் பேசிய மான்ட்ஃபோர்ட் கேர் தலைமை நிர்வாகி ஐலீன் இங் கூறினார்.

மூத்தோரின் கருத்துகளுக்கேற்ப இச்சேவைகளை மாற்றியமைக்க முடியும் என்றும் மாந்தோறும் கிட்டத்தட்ட 800 மூத்தோரை ஈடுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

(இடமிருந்து) லியன் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி லீ போ வா,  சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங், மான்ட்ஃபோர்ட் கேர் தலைமை நிர்வாகி ஐலீன் இங் ஆகியோர் புதன்கிழமை (நவம்பர் 25) புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
(இடமிருந்து) லியன் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி லீ போ வா,  சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங், மான்ட்ஃபோர்ட் கேர் தலைமை நிர்வாகி ஐலீன் இங் ஆகியோர் புதன்கிழமை (நவம்பர் 25) புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுவாக இத்தகைய நிலையங்களுக்கு வரத் தயங்கும் ஆண்கள் பலரை இந்நிலையம் ஈர்த்துள்ளதாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங் குறிப்பிட்டார்.

செப்டம்பரில் செயல்படத் தொடங்கியதிலிருந்து இந்நிலையத்தில் சேர்ந்த 429 உறுப்பினர்களில் 27 விழுக்காட்டினர் ஆண்கள்.

பல்வேறு சேவை வழங்குநர்களை ஒன்றிணைத்து மேலும் முழுமையான ஆதரவை வழங்குவதில் இந்நிலையத்தின் மதிப்பு அடங்கியுள்ளதாகத் திரு கோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்