சிங்கப்பூர் நாணய ஆணையம், திட்டமிடப்பட்ட $2.1 பில்லியன் மதிப்பிலான இருபதாண்டு பசுமை உள்கட்டமைப்பு பங்குப் பத்திரத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட ஐந்து முன்னணி வங்கிகளை நியமித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
டிபிஎஸ் வங்கி, டச்சு வங்கி, எஸ்எஸ்பிசி, ஓசிபிசி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகியன அந்த வங்கிகள் என்று குறிப்பிட்டுள்ள அந்தச் செய்தி நிறுவனம், ஆணையத்தின் ஆவணம் ஒன்றை மறுஆய்வு செய்ததன் அடிப்படையில் இதனைத் தெரிவிப்பதாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) கூறியது.
சிங்கப்பூர் வெள்ளி மதிப்பிலான அந்த பங்குப் பத்திரம் 2046ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதக் காலாவதியைக் கொண்டிருக்கும். குறைந்தபட்சத் தொகையான $2.1 பில்லியன் மதிப்பிலான அதன் தொடக்கம், சந்தை நிலவரத்தைப் பொறுத்து இவ்வாரத் தொடக்கத்தில் நிகழக்கூடும்.
இந்த வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய், சிங்கப்பூரின் பசுமைப் பத்திரக் கட்டமைப்பின்கீழ் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும். தகுதிவாய்ந்த, நீடித்து நிலைக்கும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நிதியளிப்பதுடன், அவற்றின் தாக்கம் குறித்த வருடாந்தர அறிக்கையையும் அந்தக் கட்டமைப்பு கேட்டுப் பெறும்.
உலகளாவிய தரநிர்ணய நிறுவனமான மூடிஸின் ‘ஏஏஏ’ தரநிலை, ‘எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ்’ என்னும் தரநிர்ணய அமைப்பின் ‘ஏஏஏ’ தரநிலை என்னும் உயர்நிலை அரசுரிமைக் கடன் மதிப்பீடுகளை சிங்கப்பூர் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

