தென்கிழக்காசிய நாடுகளின் உணவு விநியோகச் சந்தை முன்பைவிட விரைவாக, அதிக அளவில் வளர்ச்சி கண்டுள்ளபோதிலும் சிங்கப்பூரின் உணவு விநியோகச் சந்தையின் வளர்ச்சி குறைவாக உள்ளது.
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் உணவு விநியோகச் சந்தை 13 விழுக்காடு வளர்ச்சி கண்டு 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
தென்கிழக்காசியாவின் உணவு விநியோகச் சந்தை சராசரியாக 18 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
இந்தத் தகவலை மொமென்டம் வொர்க்ஸ் ஆலோசனை நிறுவனம் புதன்கிழமையன்று (ஜனவரி 28) வெளியிட்டது.
உணவு விநியோகச் சந்தையின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரைவிட பிலிப்பீன்சின் வளர்ச்சி மட்டுமே குறைவாக உள்ளது.
பிலிப்பீன்சின் உணவு விநியோகச் சந்தை 12 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
பிலிப்பீன்சைப் புயல்கள் தொடர்ந்து புரட்டிப்போட்டதால் அதன் உணவு விநியோகச் சந்தையின் வளர்ச்சி தடைபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உணவு விநியோகத்துக்கான தேவை சிங்கப்பூரில் தொடர்ந்து வலுவாக இருப்பதை அதன் ஈரிலக்க வளர்ச்சி காட்டுவதாக மொமென்டம் வொர்க்சின் தலைமை நிர்வாகி லீ ஜியாங்கான் கூறினார்.

