சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி மோசமடைந்துவரும் வர்த்தகப் பூசல்களால் மெதுவடையக்கூடும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார்.
வல்லரசு நாடுகளில் உத்திபூர்வ முதலீடுகள் செய்வதற்கான போட்டாப்போட்டியாலும் பொருளியல் வளர்ச்சி மந்தமாகும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
எனவே, கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டு ஒரு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடு வரை மட்டுமே வளரும்.
கடந்த ஆண்டு அது 4.4 விழுக்காடாகப் பதிவானது.
இருப்பினும், ஆசியாவின் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சிக் காணும் என்ற திரு கான், தென் கிழக்காசியாவின் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் நான்காவது ஆகப் பெரிய பொருளியலாக உருமாறும் என்று கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மின்னிலக்கமயமாதல், குறைந்த கரிமத்துக்கு மாறுவது ஆகியவை வட்டாரத்தின் மின்னிலக்க, பசுமைப் பொருளியல்களின் வளர்ச்சிக்குப் புது வாய்ப்புகளை உருவாக்கும் என்று திரு. கான் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் அதன் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் மோசமடைவதால் அனைத்துலக வர்த்தகச் சூழல் மாறும்.
அதன் மூலம் முதலீடுகளை சிங்கப்பூருக்கு ஈர்க்க முடியும் என்று திரு கான் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
வெவ்வேறு துறைகளில் தலைவர்களாக உருவெடுக்கக்கூடிய ஆற்றல்கொண்ட உள்ளூர் வர்த்தகங்களுக்கு 1 பில்லியன் வெள்ளி தனியார் வளர்ச்சி நிதியைத் திரு கான் அறிவித்தார்.
இத்தகைய உடனடிச் சவால்களைத் தாண்டி சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி நீண்டகால உள்நாட்டு நெருக்கடிகளாலும் மந்தமடைவதாகத் திரு கான் சொன்னார்.
உள்ளூர் ஊழியரணி எண்ணிக்கையும் இனிவரும் ஆண்டுகளில் மெதுவாகவே உயரக்கூடும்.
சிங்கப்பூரி நிலப் பற்றாக்குறையால் இருக்கும் நிலப்பரப்பைக் கூடுமானவரை பயன்படுத்த புதிய வழிகளை சிங்கப்பூர் கண்டறியவேண்டும் என்று திரு கான் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் இனிவரும் மாதங்களிலும் ஆண்டுகளிலும் நிச்சயமற்ற பொருளியலையும் இடையூறுகளையும் எதிர்நோக்கலாம் என்ற திரு கான், புத்தாக்கம் போன்ற வழிகள் மூலம் நாடு போட்டித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்றார் அவர்.