சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்து வருகிறது. குடியரசின் மத்தியப் பகுதியை அதிகம் பாதித்த புகைமூட்டம், தற்போது மேற்கு வட்டாரத்தையும் சூழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) காலை 10 மணி நிலவரப்படி அங்குத் தற்போதைய காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
அந்த வட்டாரத்தில் 24 மணிநேர காற்றுத்தரக் குறியீடு தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
மத்திய வட்டாரத்தில், காற்றுத்தரக் குறியீடு சனிக்கிழமை பிற்பகல் 1 மணிமுதல் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. நாட்டின் மற்ற பகுதிகளில் காற்றுத்தரக் குறியீடு நாள்முழுவதும் மிதமான அளவில் இருந்த வேளையில், மத்திய பகுதி அந்த நிலைக்கு வரநேர்ந்தது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கிழக்கு வட்டாரத்தில் காற்றுத்தரக் குறியீடு 102ஆகப் பதிவானது. பின்னர் காலை 10 மணி நிலவரப்படி, அது 99ஆகக் குறைந்தது. மேற்குப் பகுதியில் காலை 10 மணி நிலவரப்படி, காற்றுத்தரக் குறியீடு 106ஐ எட்டியது. மத்தியப் பகுதியில், அது 120ஆகப் பதிவானது.
காற்றுத்தரக் குறியீடு 101 முதல் 200 வரை பதிவானால், அது ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது. அதுபோன்ற சூழ்நிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 51 முதல் 100 வரை பதிவுசெய்யப்பட்டால் அது மிதமான அளவாகக் கருதப்படுகிறது. அதுவே 0 முதல் 50க்குள் பதிவானால், காற்றுத்தரம் நல்ல நிலையில் இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
