பேச்சின் மூலம் போர் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கை: விவியன்

பேச்சின் மூலம் போர் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கை: விவியன்

2 mins read
ஈரான் போர் குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் பேசினார் டாக்டர் விவியன் பாலகிரு‌ஷ்ணன்
1acb2fdd-2743-4015-a999-00138d22ed84
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்குப் பூசலுக்கு நீண்டகாலத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளும் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் கூறியுள்ளார்.

தமக்கும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சிக்கும் இடையே நல்ல கருத்து பரிமாற்றம் இடம்பெற்றதாக அவர் செவ்வாய்க்கிழமை (மே 12) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அரசதந்திர முறைகள், பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலமாக மத்திய கிழக்குப் பூசலுக்குத் தீர்வுகாண முடியும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளதாக டாக்டர் பாலகிரு‌‌ஷ்ணன் குறிப்பிட்டார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணையின் நீடித்த எதிர்காலத்தைப் பற்றி அமைச்சர்கள் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடினர்.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியிலிருந்து ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டு வந்துள்ளது. அதற்கு முன்பு உலக நாடுகள் பயன்படுத்தும் மொத்த எண்ணெய், திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு அவ்வழியே கொண்டுசெல்லப்பட்டது.

“கடற்பகுதிச் சட்டம், நடைமுறையில் இருந்துவரும் அனைத்துலகச் சட்டம் ஆகியவற்றின் தொடர்பிலான 1982 ஐக்கிய நாட்டு நிறுவன ஒப்பந்தத்தின்படி அனைத்துலகப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் எல்லாப் பாதைகள் வழியாகவும் செல்ல அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற உரிமை இருக்கவேண்டும்,” என்று டாக்டர் பாலகிரு‌ஷ்‌ணன் தமது பதிவில் சொன்னார். வட்டார அளவிலான நிலைத்தன்மை, உலக எரிசக்திப் பாதுகாப்பு, அனைத்துலக வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதேவேளை, அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ் தங்களின் அணுவாயுதத் திட்டம் அமைதியான காரணங்களுக்காகத்தான் என்பதை ஈரான் உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினேன்,” என்றும் டாக்டர் பாலகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.

அணுவாயுதத் திட்டம்

ஈரான் அணுவாயுதங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் அவற்றின் பங்காளித்துவ நாடுகளும் நீண்டகாலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஈரான் அதைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

அதேநேரம், ஒப்பந்தத்தின்படி அமைதி தொடர்பான காரணங்களுக்காக அணுசக்தியை உருவாக்கும் உரிமை தனக்கு உள்ளதாகவும் அது கூறிவருகிறது.

குறிப்புச் சொற்கள்