‘ஏஐ’ தேவையால் அதிகரித்த சிங்கப்பூர் தொழிற்சாலை உற்பத்தி

‘ஏஐ’ தேவையால் அதிகரித்த சிங்கப்பூர் தொழிற்சாலை உற்பத்தி

படம்: சாவ்பாவ்

28 Sep 2026 - 2:50 pm

2 mins read

சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் விரிவடைந்துள்ளது. வேதியியல் பிரிவைத் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் உற்பத்தி வளர்ச்சி கண்டது.

ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 15.4 விழுக்காடு அதிகரித்தது.

ஜூலை மாதத்தில் திருத்தப்பட்ட 6.9 விழுக்காட்டு வளர்ச்சியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் மொத்த தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 15.4 விழுக்காடு அதிகரித்தது.

எனினும், புளூம்பெர்க் கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்த்த 17.1 விழுக்காட்டு வளர்ச்சியை அந்த வளர்ச்சி எட்டவில்லை.

உயிரி மருத்துவ உற்பத்தித் துறையைத் தவிர்த்து, உற்பத்தி 17 விழுக்காடு பெருகியதாகத் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பொருளியல் மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

துல்லியப் பொறியியல் துறை ஆகஸ்ட் மாதத்தில் ஆகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. இயந்திரங்கள், கட்டமைப்புப் பிரிவில் பகுதிமின்கடத்தி உபகரணங்களின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் அது 33.9 விழுக்காடு உயர்ந்தது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த வலுவான தேவைக்கு மத்தியில், சேவையகங்கள், அது தொடர்பான பொருள்கள், பகுதிமின்கடத்திகள், தரவு சேமிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்ததால் மின்னணுத் துறை ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 28.5 விழுக்காட்டு வளர்ச்சி கண்டது.

அந்தத் துறையின்கீழ், பகுதிமின்கடத்திகளின் உற்பத்தி 26.1 விழுக்காடு அதிகரித்தது. தகவல், தொடர்புகள், பயனீட்டாளர் மின்சாதனங்களின் உற்பத்தி 66.3 விழுக்காடும் கணினிப் பொருள்கள், தரவுச் சேகரிப்பு ஆகியவை 20.4 விழுக்காடும் வளர்ந்தன.

பிற மின்சாதனப் பொருள்கள், பாகங்களின் உற்பத்தி 6 விழுக்காடு சரிந்தது.

போக்குவரத்துப் பொறியியல் துறை தரைவழி, வான்வெளிப் பிரிவுகளின் சிறப்பான செயல்பாட்டால் 9.5 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது.

குறிப்பாக, வான்வெளிப் பிரிவில் விமானப் பாகங்களின் அதிக உற்பத்தியாலும் வணிக ரீதியான விமான நிறுவனங்களின் தொடர்ச்சியான பராமரிப்பு, பழுதுபார்ப்பு, ஒட்டுமொத்த ஆய்வுப் பணிகளாலும் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பானங்கள், வணிக ரீதியான அச்சுப் பணிகள், உலோகக் கதவுகள், சன்னல்களின் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாகப் பொது உற்பத்தித் துறை 1.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

உயிர்மருத்துவ உற்பத்தித் துறை கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.4 விழுக்காடு என்ற அளவில் சற்று அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்
தொழிற்சாலைஉற்பத்திவளர்ச்சிசெயற்கை நுண்ணறிவு