ஈரான் போரால் 1.8% அதிகரித்த சிங்கப்பூர்ப் பணவீக்கம்

ஈரான் போரால் 1.8% அதிகரித்த சிங்கப்பூர்ப் பணவீக்கம்

2 mins read
616e0a0c-24ef-44b3-b65d-86be82eb23f7
ஈரான் போரால் பெட்ரோல் விலைகள் அதிகரித்துள்ளதால் சிங்கப்பூர் பணவீக்கம் உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பயனீட்டாளர் விலைகள் கடந்த மார்ச் மாதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், சில்லறை வர்த்தகம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததால் பயனீட்டாளர் விலைகள் உயர்ந்தன.

ஈரான் போரால் கூடுதலான வீட்டுப் பொருள்கள், சேவைகளின் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 1.8 விழுக்காடு உயர்ந்தது. பிப்ரவரி மாதம் அது 1.2 விழுக்காடாக இருந்தது.

தனியார் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், பிற பொருள்கள், சேவைகள் ஆகியவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பால் கடந்த மாதம் பணவீக்கம் உயர்ந்தது.

மூலாதாரப் பணவீக்கம் கடந்த மாதம் 1.7 விழுக்காடு அதிகரித்ததாகச் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

பிப்ரவரியில் அது 1.4 விழுக்காடாக இருந்தது. மூலாதாரப் பணவீக்கத்தில் தனியார் போக்குவரத்தும் தங்குமிடங்களும் சேர்த்துக்கொள்ளப்படாது.

சிங்கப்பூரின் இறக்குமதிச் செலவுமீதான அழுத்தம் இனிவரும் மாதங்களில் அதிகரிக்கும் என்று அமைச்சும் ஆணையமும் தெரிவித்தன.

“மத்திய கிழக்கில் மோசமடையும் நிலவரத்தால் எரிசக்தி விலையும் பிற செலவுகளும் அதிகரிப்பதால் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள், சேவைகளின் உற்பத்தியும் போக்குவரத்துக் கட்டணமும் அதிகரிக்கும்,” என்று அவை சுட்டின.

பிப்ரவரியில் 2.4 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரின் தனியார் போக்குவரத்து பணவீக்கம், ஈரான் போரால் உயர்ந்த பெட்ரோல் விலைகளால் கடந்த மாதம் 6.6 விழுக்காடாக அதிகரித்தது.

பெட்ரோல் விலைகள் பிப்ரவரி மாதத்திலிருந்து அதிகரித்துவருவதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர். அதிகாரபூர்வ தரவுகளில் அந்த அதிகரிப்புத் தாக்கம் மார்ச் மாதத்தில்தான் முழுமையாகத் தென்பட்டதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

எரிசக்தி விலைகள் கட்டங்கட்டமாக விநியோகத் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில் அது, தளவாடங்கள், உணவு உற்பத்தி, எதிர்வரும் மாதங்களில் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டினர்.

மின்சார, எரிவாயு விலைகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 4.3 விழுக்காடு குறைந்தது. எனினும், ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை அறிவிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்களால் அவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்