ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 46.2% உயர்வு

ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 46.2% உயர்வு

2 mins read
e859697e-3d5e-484d-8b19-c3a77c607b17
மின்னணுவியல் சாதனங்களின் ஏற்றுமதி ஜூலையில் 112 விழுக்காடாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 131.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாதனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 46.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இது, ஜூலை மாதத்தில் பதிவான 24.1 விழுக்காட்டு உயர்வைவிடக் கூடுதலாகும்.

புளூம்பெர்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்த 35.1 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இந்த உயர்வு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் என்டர்பிரைஸ் அமைப்பு வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 17) வெளியிட்ட தரவுகளின்படி, மின்னணுவியல் சாதனங்களின் ஏற்றுமதி ஜூலையில் 112 விழுக்காடாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 131.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி 12 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

மின்னணுத் துறையில் கணினி வட்டுகள் 290.2 விழுக்காடும் தனிநபர் கணினிகள் 237.9 விழுக்காடும் ஏற்றுமதி உயர்வைப் பதிவு செய்து அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளின் ஏற்றுமதி 90.9 விழுக்காடு கூடியுள்ளது.

அதிக அலைகற்றை நினைவக சில்லுகளின் உற்பத்தியில் தொழிற்சாலை விநியோகத் தடைகளுக்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் ஒரு பேரளவிலான மேகக்கணிமை, தொழில்நுட்ப நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க முதலீடுகளால் உந்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான வன்பொருளுக்கான தேவை தணியாததாகவே உள்ளது என்று டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங் கூறினார்.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு உருவாக்கம், சிங்கப்பூரின் ஏற்றுமதிகளுக்கு ஒரு நீடித்த உந்து சக்தியாகத் தொடரும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

மின்னணு சாராப் பொருள்கள் பிரிவில், பணம் சாராத் தங்கம் 67 விழுக்காட்டு அதிகரிப்புடன் முன்னிலை வகிக்கிறது. மேலும், சிறப்புப் பயன்பாட்டு இயந்திரங்களின் ஏற்றுமதி 57.7 விழுக்காடும், மருத்துவச் சாதனங்களின் ஏற்றுமதி 22.1 விழுக்காடும் உயர்ந்துள்ளன.

நாடுகள் வாரியாகப் பார்க்கையில், அமெரிக்கா, சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் விரிவடைந்தது. அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி சுருக்கமடைந்தது.

குறிப்புச் சொற்கள்
ஏற்றுமதிமின்னணுவியல்பொருளியல்