அனைவரையும் உள்ளடக்கும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய கலை விழாவான ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ் (Shaping Hearts) 2025’இன் அதிகாரபூர்வ தொடக்க விழா சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்றது.
சிறப்புத் தேவையுடையோரைக் கொண்ட சமூகத்தின் கலைத் திறனைக் கொண்டாடவும் அனைவரையும் உள்ளடக்கவும் அந்த வருடாந்தரக் கலை விழா வகைசெய்கிறது. ‘எல்லைகளுக்கு அப்பால்’ என்ற கருப்பொருளில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம்.
‘நமது தெம்பனிஸ்’ நடுவத்தின் ‘ஃபெஸ்டிவ் பிளாசா’வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவருடன் வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் பே யாம் கெங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, சுகாதார, மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் ஆகியோரும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர்.
“ஆறு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் கலைக்கு எல்லை இல்லையென்றாலும் வாய்ப்புகளுக்கு எல்லை இருந்தது. ஆனால் வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் ஆதரவில் ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’ நிறுவப்பட்டது. அத்துடன் 27 சமூக சேவை நிறுவனங்கள் ஒன்றிணைந்து, சமுதாயத்தில் மேலும் பலரைச் சென்றடையவும் உதவி செய்தது,” என்றார் மேயர் பே யாம் கெங்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் 130 மீட்டர் நீள சுவரோவியம் பொது இடங்களை மாற்றியமைக்கும் நோக்கில் உருவாக்கப்படும்.
“கலை அனைவரையும் ஒருங்கிணைத்து, சமமான தளத்தை ஏற்படுத்தித் தருகிறது. கலைஞர்களுக்கு மேடை மட்டுமல்லாமல், சுதந்திரம், வேலைவாய்ப்பு, அங்கீகாரம் ஆகியவற்றையும் இது போன்ற நிகழ்ச்சிகள் வழங்குகின்றன,” என்றார் சிறப்புரையாற்றிய அமைச்சர் இந்திராணி.
இவ்வாண்டு சிங்கப்பூர் தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் திறமைகள் மிளிரும் என்பதற்குச் சிறந்த எடுத்துகாட்டாகத் திகழும் வகையில் இவ்விழா அமைவது மற்றொரு சிறப்பம்சம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கலையின் எல்லையற்ற வெளிப்பாட்டை உணர்த்தும் வகையில், நிகழ்ச்சியில் ஒரு புதுமையான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
230க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களின் கைவண்ணத்தில் சிங்கப்பூரின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் கண்முன் கொண்டுவரும் நோக்கத்தில் இவ்வாண்டின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி மட்டுமன்றி முதல்முறையாக ‘கேட்வாக்’ என்ற ஆடை அலங்கார நடைக்கு ஏற்பாடு செய்துள்ளது ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’.
அதன் ஓர் அங்கமாகத் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர் குழுக்களும் 13 ‘ஷேப்பிங் ஹார்ட்ஸ்’ கலைஞர்களும் இணைந்து அசல் கலைப்படைப்புகளை ஆடைகளாக மாற்றியமைத்துள்ளனர்.
ஆடைகளும் அணியக்கூடிய அலங்காரப் பொருள்களும் தன்னம்பிக்கை, அடையாளம், படைப்பாற்றல் ஆகியவற்றை உணர்த்தும் கதைகளைப் பிரதிபலித்தன.
“ஷேப்பிங் ஹார்ட்ஸ் கலைஞர் ரேடனின் கைவண்ணமும் என்னுடைய வடிவமைப்புத் திறனும் இணைந்து ‘குத்தி குத்தி’, ‘ஐந்து கல்’ போன்ற சிங்கப்பூரின் பழைய விளையாட்டுகளை மையமாக வைத்து ஆபரணங்களை உருவாக்கியது எனக்குப் புதுமையான அனுபவமாக இருந்தது. என்னுடைய படைப்புகளை அணிந்து கலைஞர்கள் மேடையில் பவனி வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,”என்றார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி வர்சினி சேகர், 19.
அனைவரையும் உள்ளடக்கும் கலைச் சமூகமாகத் திகழத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம் பிரபல உள்ளூர்க் கலைஞர்களான இமான் ஃபாண்டி, லீ தெங், தாஷா லோ ஆகியோர் உடற்குறையுள்ள கலைஞர்களுடன் மேடையில் பவனி வந்தனர்.
ஷேப்பிங் ஹார்ட்ஸின் திறப்பு விழாவில் ‘பிஒய்டி’ (BYD) நிறுவனத்துடன் இணைந்து ஒளியூட்டு அங்கமும் இடம்பெற்றது.
பல்வேறு கலாசாரங்களையும் அவற்றின் கதைகளையும் சொல்லும் விதமாக ஆசியான் நாடுகள், ஜோர்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த உடற்குறையுள்ள கலைஞர்களின் கலைப்படைப்புகளும் விழாவில் அங்கம் வகிக்கின்றன.
இவ்விழா செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறும்.

