சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் ஆகப்பெரிய உணவு விநியோகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (மே 18) ஏற்பாடு செய்யப்பட்டது.
எஸ்ஜி60, மே தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு மொத்தம் 60,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
மனிதவள அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவின் (ஏஸ்) ஆதரவுடன் 60 உணவகங்கள் ஒன்றுசேர்ந்து இலவச உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தன.
பெர்ச் ரோடு, 28 ஊழியர் தங்குவிடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு நிலையம் என பல இடங்களில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
காலை, மதிய, இரவு வேளை உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வரிசையில், மாலையில் பெர்ச் ரோட்டில் அங்கூலியா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள திறந்தவெளியில் உணவு விநியோகம் இடம்பெற்றது.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கம் வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு அமைந்தது. இசை அங்கங்கள், விளையாட்டுகள் என வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருந்தாக அமைந்தது நிகழ்ச்சி.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
“சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக முக்கியப் பங்காற்றிய வெளிநாட்டு ஊழியர்களின் தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டும். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இக்கொண்டாட்டம் அமைகிறது,” என்றார் டாக்டர் டான்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சமூகத்தில் அனைவரும் வெளிநாட்டு ஊழியர்களை அரவணைக்கும் விதமாக அன்றாடம் சிறு செயல்களில் ஈடுபட ஊக்கமளித்த அமைச்சர் டான், ‘வணக்கம்’ அல்லது ‘நன்றி’ போன்ற சிறிய சொற்களை உளமார்ந்து கூறி அவர்களின் நாளை சிறப்பானதாக்க முடியும் என்றார்.
மேலும் ஒன்றுபட்ட, பரிவுமிக்க சமூகத்தை உருவாக்குவதில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
கல்வி நிலையங்கள் போன்ற வெவ்வேறு பின்னணியை சேர்ந்த 160க்கும் மேலான தொண்டூழியர்கள் உணவு விநியோகத்தில் பங்கெடுத்தனர்.
வேலையிடப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நினைவூட்டிய டாக்டர் டான், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
“ஒவ்வோர் உணவகமும் தங்களால் முடிந்த அளவுக்கு உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தன. விதிமுறைகளின்படி, உணவுப் பொட்டலங்களை நான்கு மணி நேரத்திற்குள் இடத்தைச் சென்றடைய வேண்டும். அதன்படி, ஏற்பாடுகள் அனைத்தும் சுமுகமாக நடந்து முடிந்தன,” என்றார் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மகேந்திரன்.
உணவுப் பொட்டலங்களைத் தயாரித்த உணவகங்களில் ஒன்றான காயத்ரி உணவகம், 15,000 உணவுப் பொட்டலங்களை வழங்கியது.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு உந்துதலாக மற்ற ஆதரவுக் குழுக்களும் நிறுவனங்களும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கவும் இது ஓர் ஆரம்பப்புள்ளியாக திகழ்கிறது,” என்றார் காயத்ரி உணவகத்தின் நிறுவனரான ஜி.சண்முகம், 62.

