சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்துப் பணிமனை திட்டமிட்டபடி 2026ல் திறக்கப்படவுள்ளது

சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்துப் பணிமனை திட்டமிட்டபடி 2026ல் திறக்கப்படவுள்ளது

2 mins read
8502d303-da65-43b6-823b-52d750f9ea7a
ரயில் தண்டவாளங்களைப் பொருத்துதல், கட்டடக்கலைப் பணிகளை முடித்தல், சாலைப் பணிகள் , பணிமனைகளைச் சுற்றியுள்ள சுவர்களையும் வேலிகளையும் அமைத்தல் ஆகிய பணிகள் எஞ்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்துப் பணிமனை திட்டமிட்டபடி 2026ஆம் ஆண்டில் திறக்கப்பட இருக்கிறது.

அதற்தான கட்டுமான, கட்டடக்கலைப் பணிகள் ஏறத்தாழ 98 விழுக்காடு நிறைவடைந்துவிட்டன.

குழாய்களைப் பொருத்துதல், மின்சாரப் பணிகள் போன்றவை 83 விழுக்காடு நிறைவடைந்துவிட்டன.

சாங்கியில் இருக்கும் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைப்புப் பணிமனைக்கான பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

பணிமனையை 2024ஆம் ஆண்டில் திறக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

பிறகு அது இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

கொவிட்-19 நெருக்கடிநிலையால் பணிகள் தடைப்பட்டு அதன் திறப்பு 2025ஆம் ஆண்டுக்கு முதலில் ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு பணிமனை 2026ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரயில் தண்டவாளங்களைப் பொருத்துதல், கட்டடக்கலைப் பணிகளை முடித்தல், சாலைப் பணிகள், பணிமனைகளைச் சுற்றியுள்ள சுவர்களையும் வேலிகளையும் அமைத்தல் ஆகிய பணிகள் எஞ்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட பணிமனை கட்டுமானத்தளத்துக்கு நவம்பர் 27ஆம் தேதியன்று செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் 2016ஆம் ஆண்டில் தொடங்கியது.

2026ஆம் ஆண்டில் அது தயாராகும்போது, அதில் மூன்று ரயில் பாதைகளில் சேவை வழங்கும் ரயில்களுக்கான பணிமனைகளும் பேருந்து பணிமனை ஒன்றும் இயங்கும்.

பணிமனையின் கட்டுமானப் பணிகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் இரண்டு திட்டமிடப்பட்ட சேவை மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று ஆணையம் கூறியது.

கிழக்கு-மேற்கு ரயில் பாதையின் வெவ்வேறு அம்சங்களை இவை பாதிக்கும்.

இவற்றுக்கான தேதிகளும் விவரங்களும் பிறகு அறிவிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

பணிமனைக்கான வடிவமைப்பில் சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பணிமனையின் மேற்கூரையில் செடிகளை வளர்ப்பது இதில் அடங்கும்.

அதுமட்டுமல்லாது, மேற்கூரையில் 14,000க்கும் மேற்பட்ட சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்படும்.

பல மாடிகளைக் கொண்ட புதிய பணிமனையில் ஒரே நேரத்தில் 220 ரயில்கள் நிறுத்திவைக்கப்படலாம்.

பணிமனையின் சேவைகள் படிப்படியாகத் தொடங்கும் என்றும் ஏறத்தாழ 700 ஊழியர்கள் அங்கு பணிபுரிவர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ரயில்பேருந்துகட்டுமானம்