சிங்கப்பூர் சட்டத்தொழில் முக்கியத் திருப்புமுனையில் உள்ளது: அமைச்சர் டோங்

சிங்கப்பூர் சட்டத்தொழில் முக்கியத் திருப்புமுனையில் உள்ளது: அமைச்சர் டோங்

2 mins read
015afb64-12fe-4187-87bb-203d07e5109f
சட்ட அமைச்சர் எட்வின் டோங், அண்மையில் வெளியிடப்பட்ட சட்டத் தொழில் நிலைத்தன்மை அறிக்கையைத் தாம் வரவேற்பதாகக் கூறினார். - படம்: சட்ட அமைச்சு

சிங்கப்பூரின் சட்டத்தொழில் ஒரு ‘முக்கியமான திருப்புமுனையில்’ இருப்பதாகச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்களின் எதிர்காலம் குறித்த உரையாடல்கள், வேலை நேரம், ஊதியத்தைக் கடந்து, அவர்கள் செய்யும் வேலையின் மதிப்பையும் நோக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற சட்டத் தொழில் கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டோங், வேலை விலகல், பணிச்சூழல் பண்பாடு, தொழில்நுட்ப மாற்றங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் இத்துறை, ஒரு நிலையான எதிர்காலத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவோடு இருக்க வேண்டும் என்றார்.

அண்மையில் வெளியிடப்பட்ட சட்டத் தொழில் நிலைத்தன்மை அறிக்கையைத் தாம் வரவேற்பதாகக் கூறிய அமைச்சர், வழக்கறிஞர்கள் இத்துறையிலிருந்து விலகுவதற்கு நீதிமன்றக் கெடுபிடிகள், பணிச்சூழல், மனநலச் சிக்கல்கள் ஆகியவை முக்கியக் காரணங்களாக இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 2015 முதல் 2024 வரையிலான தரவுகளின்படி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் 60 விழுக்காட்டு வழக்கறிஞர்களும், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் 40 விழுக்காட்டு வழக்கறிஞர்களும் இத்துறையில் தொடர்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். வழக்கறிஞர்கள் இத்துறையை விட்டு முழுமையாக விலகவில்லை என்றும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கச் சேவைகளில் வேறு வழிகளில் அவர்கள் பங்களிப்பதாகவும் திரு டோங் கூறினார்.

புதிதாக வழக்கறிஞர் தொழிலுக்குத் தகுதிபெற்ற 289 பேரிடம் சிங்கப்பூர் சட்டக்கல்விக் கழகம் அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. அவர்களில் மூவரில் ஒருவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்போதைய நிறுவனத்தை விட்டு விலக விரும்புவதாகக் கூறினர். ஆனால், எட்டுப் பேர் மட்டும் சட்டத் தொழிலை விட்டு விலக விரும்புவதாகக் கூறினர் என்பதை அமைச்சர் சுட்டினார்.

இளம் வழக்கறிஞர்களுக்கு நல்ல வழிகாட்டுதலும், மரியாதையான பணிச்சூழலும் அவசியம் என்று கூறிய அமைச்சர் டோங், சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஆராய ‘ஸ்கேல்’ என்ற புதிய குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்