சிக்கலான பாதுகாப்புச் சூழலில் சிங்கப்பூரின் ராணுவ உத்தியை வழிநடத்திய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அமைச்சரவையில் 20 ஆண்டுகளுக்குமேல் அங்கம் வகித்த நிலையில் அரசியலிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தெரிவித்தார்.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதிக்கும் மேரிமவுண்ட் தனித்தொகுதிக்குமான மக்கள் செயல் கட்சி (மசெக) அணியை அறிமுகம் செய்துவைத்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் இங், தலைமைப் புதுப்பிப்பே கட்சியின் வலிமை எனவும் புதிய வேட்பாளர்களுக்கு வழிவிட தாம் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான நேரம் இது எனவும் சொன்னார்.
“மசெக அணியின் புதுப்பிப்புக்கு நான் வழிவிடுவதற்கான நேரம் இது என சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் நான் தெரியப்படுத்தியிருந்தேன். அடுத்த பொதுத் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்,” எனக் கூறிய டாக்டர் இங், 24 ஆண்டுகாலமாக தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு குழுத்தொகுதியின் குடியிருப்பாளர்களிடம் நன்றி கூறினார்.
“என் குடியிருப்பாளர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றியுள்ளதைக் கௌரவமாக நான் கருதுகிறேன்,” என்றார் டாக்டர் இங், 66.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி மசெக அணிக்குத் தலைமை தாங்கும் டாக்டர் இங்கின் இடத்தைப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நிரப்புவார்.
“திரு சீ ஹொங் டாட் ஆற்றல்மிக்கவர். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அவர் தம்மை நிரூபித்துள்ளார்,” என டாக்டர் இங் புகழாரம் சூட்டினார்.
புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் இங், 2001 பொதுத் தேர்தலில் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதிக்கான மசெக அணியில் இடம்பெற்றதன் மூலம் அரசியலில் நுழைந்தார். பின்னர் கல்வி, மனிதவள துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், 2004ல் முழு அமைச்சரானார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் தற்காப்புத் துறையுடனான டாக்டர் இங்கின் தொடர்பு, 2005ல் தொடங்கியது. அப்போது மனிதவள அமைச்சர் பொறுப்பைத் தக்கவைத்துக்கொண்ட அதேவேளையில், தற்காப்பு இரண்டாம் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்னிடமிருந்து 2011ல் தற்காப்பு அமைச்சர் பொறுப்பை டாக்டர் இங் ஏற்றார்.
தற்காப்பு அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு, 2005 முதல் 2011 வரை தற்காப்பு இரண்டாம் அமைச்சராக டாக்டர் இங் பொறுப்பு வகித்தார். 2004 முதல் 2008 வரை கல்வி அமைச்சர், 2008 முதல் 2011 வரை மனிதவள அமைச்சர் உட்பட அமைச்சரவையில் மற்ற பதவிகளையும் அவர் வகித்திருந்தார்.
தமக்குப் பிறகு அடுத்த தற்காப்பு அமைச்சர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், புதிய உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்மானம் தமது புதிய அணியிடம் இருக்கும் என்ற நம்பிக்கையைப் பிரதமர் வோங் கொண்டிருப்பதாகக் கூறினார்.
தலைமைத்துவப் புதுப்பிப்புக்கும் அனுபவத்துக்கும் இடையே சமநிலை காண்பது என்பது ஒவ்வோர் அரசாங்கமும் கடக்கவேண்டிய பயணம் என்பதைச் சுட்டிய டாக்டர் இங், மசெக தொடர்ந்து தலைமைத்துவத்தைப் புதுப்பித்து வருவது அதன் வலிமையே என்றார்.
சிங்கப்பூரர்களின் ஆதரவுடன், நான்காம் தலைமுறைத் தலைமைத்துவக் குழுவால் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்ற முழு நம்பிக்கை தமக்கு இருப்பதாக டாக்டர் இங் சொன்னார்.