சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி எட்டாண்டுகள் காணாத வளர்ச்சி

சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி எட்டாண்டுகள் காணாத வளர்ச்சி

2 mins read
9cf15162-5f9b-4395-94b9-154647ed1f02
சிங்கப்பூரின் கொள்முதல் நிர்வாகிகள் குறியீடு, ஆகஸ்ட் மாதம் 51.5 புள்ளிகளுக்கு உயர்ந்தது.    - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்திச் செயல்பாடுகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து 13வது மாதமாக வளர்ச்சியடைந்துள்ளன. அவை, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தேவை அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணம்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுகள் முடங்கிய நிலையிலும் இந்த வளர்ச்சி சாத்தியாமாகியுள்ளது. சமரசப் பேச்சாளர்களால் இன்னும் ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர இயலவில்லை. உலகின் எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு அந்த நீரிணை வழியாகவே நடக்கிறது.

சிங்கப்பூரின் கொள்முதல் நிர்வாகிகள் குறியீடு, ஆகஸ்ட் மாதம் 51.5 புள்ளிகளுக்கு உயர்ந்தது. ஜூலை மாதத்தின் 51.4 புள்ளிகளைவிட அது சற்று அதிகம். 2018ஆம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு இந்தக் குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கொள்முதல் நிர்வாகிகள் குறியீடு 50க்கு மேல் இருந்தால் அது வளர்ச்சியையும் 50க்குக் கீழ் இருந்தால் சுருக்கத்தையும் குறிக்கிறது.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் 40 விழுக்காட்டைக் கொண்டுள்ளது மின்னணுத் துறை. தொடர்ந்து 15வது மாதமாக வளர்ச்சியடைந்துள்ள மின்னணுத் துறையின் குறியீடு 52.6 புள்ளிகளைப் பதிவுசெய்தது.

மாதாந்தரக் கருத்தாய்வைத் தொகுக்கும் சிங்கப்பூர்க் கொள்முதல், பொருள்கள் நிர்வாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீஃபன் போ இதுபற்றிக் கருத்துரைத்தார்.

“அண்மைக் கொள்முதல் நிர்வாகிகள் குறியீடு, செயற்கை நுண்ணறிவால் உந்தப்படும் பகுதிமின்கடத்தியின் அதிவேகச் சுழற்சியால் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தொடர்ந்து நல்ல வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டுகிறது,” என்றார் அவர்.

இது சாதனை அளவில் வலுவான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதையும் காணமுடிவதாக அவர் சொன்னார்.

புதிய வேலைத்திட்டங்கள், புதிய ஏற்றுமதிகள், தொழிற்சாலை உற்பத்தி, மூலப்பொருள்களின் கொள்முதல் ஆகியவற்றில் உற்பத்தித் துறை வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

செயற்கை நுண்ணறிவை இயக்கும் வன்பொருள்களின் கொள்முதல் அதிகரித்தது வட்டாரத் தொழிற்சாலைச் செயல்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியாவில் நடத்தப்பட்ட தனிப்பட்ட கருத்தாய்வுகளில் அது தெரியவந்தது. கணினிச் சில்லுகள், கணினிகள், ஏஐ சார்ந்த மற்றப் பொருள்களுக்கு அதிகத் தேவை இருப்பதன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சாலைச் செயல்பாடுகள் விரிவடைந்தன. இது மத்திய கிழக்குப் பூசலால் உருவான அதிகச் செலவை ஈடுகட்ட உதவியதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உற்பத்திதொழிற்சாலைகொள்முதல்நிர்வாகிகுறியீடுஉயர்வுவளர்ச்சிசெயற்கை நுண்ணறிவுஏஐ