சிங்கப்பூர், ஒரு குறிப்பிட்ட பலதரப்புக் கூட்டமைப்பு அல்லது குழுவில் சேர முடிவெடுப்பது என்பது, அதன் தேசிய நலன்கள் மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை நோக்கங்களால் கவனமாகப் பரிசீலித்து வழிநடத்தப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் நவம்பர் 11ஆம் தேதி தெரிவித்தார்.
சிங்கப்பூர் அவ்வப்போது மற்ற நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க முடியாத நிலை ஏற்படலாம். அவற்றில் சில சிங்கப்பூருக்கு நெருங்கிய பங்காளிகளாகவோ அல்லது உலகளாவிய வல்லரசுகளாகவோ இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம் என்று அமைச்சர் கூறினார்.
பாதுகாப்பு, பொருளியல் கூட்டமைப்புகளை பெரும் வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், ஆசியான் மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் பெருகிவரும் சீரமைப்பை சிங்கப்பூர் எவ்வாறு மதிப்பிடுகிறது என்று பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்டு கியாம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
டாக்டர் விவியன் தமது பதிலில், பல்வேறு பலதரப்பு குழுக்களின் உருவாக்கம் மற்றும் விரிவாக்கம் இந்த வட்டாரத்தில் ஒரு புதிய நிகழ்வு அல்ல என்று குறிப்பிட்டார். “இது உண்மையில், பல ஆண்டுகளாக மற்றும் தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளன,” என்று தெரிவித்தார்.
“இந்த புதிய கூட்டமைப்புகள் அனைத்தின் விவகாரங்களை நாங்கள் திறந்த மனத்துடன் கவனிப்போம். அந்தக் கூட்டமைப்புகளின் செயல்பாடுகள் சிங்கப்பூருக்கு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பரிசீலிப்போம்,” என்று அமைச்சர் கூறினார்.
குவாட் மற்றும் பிரிக்ஸ் போன்ற குழுக்களில் சிங்கப்பூர் உறுப்பினராக இல்லை என்றாலும், இந்தக் குழுக்களில் உள்ள தனிப்பட்ட உறுப்பினர்களுடன் அது சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளது என்றும் டாக்டர் விவியன் விவரித்தார்.

