உட்லண்ட்ஸ் கேட்வே உள்ளிட்ட சிங்கப்பூரின் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்

உட்லண்ட்ஸ் கேட்வே உள்ளிட்ட சிங்கப்பூரின் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்

2 mins read
ab788dc0-e003-42fc-8af8-2bb8a0f6e9bc
ஓவியரின் சித்திரிப்பில் புதிய உட்லண்ட்ஸ் கேட்வே வட்டாரம். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

வட்டார வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், வரவிருக்கும் சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்பு இணைப்பு நிலையத்தையொட்டி புதிய ‘உட்லண்ட்ஸ் கேட்வே’ (Woodlands Gateway) வட்டாரத்திற்கான பெருந்திட்டத்தை சிங்கப்பூர் தீட்டி வருகிறது.

கிட்டத்தட்ட 35 ஹெக்டர் பரப்பளவிலான இந்தப் பலபயன்பாட்டு வட்டாரம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான (JS-SEZ) வடக்கு நுழைவாயிலாகச் செயல்படும் என்று திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற வர்த்தக, தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் குறிப்பிட்டார்.

2030ல் இதன் முதல் கட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியரின் சித்திரிப்பில் புதிய உட்லண்ட்ஸ் கேட்வே வட்டாரம்.
ஓவியரின் சித்திரிப்பில் புதிய உட்லண்ட்ஸ் கேட்வே வட்டாரம். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

ஜோகூரை உற்பத்தித் தளமாகக் கொண்டு, சிங்கப்பூரில் தங்களது வட்டாரத் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு ஏற்ற நீக்குப்போக்கான தொழில்துறை இடவசதிகளை இந்த மையம் வழங்கும்.

சிங்கப்பூரின் பொருளியல் வெளியைப் பாதுகாப்பதற்கும், உள்ளூர் நிறுவனங்களை அனைத்துலகமயமாக்குவதற்கு மேலும் ஆதரவளிப்பதற்குமான உந்துதலுக்கு இந்த உத்திபூர்வ மேம்பாட்டுத் திட்டம் அடித்தளமாக அமைகிறது என்றார் திருவாட்டி கான்.

பிளவுபட்டு வரும் உலகளாவிய வர்த்தகச் சூழலில், சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து விரிவடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதன் தொடர்பில், சிங்கப்பூர் தனது முக்கியப் பங்காளிகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதோடு, வளர்ந்து வரும் சந்தைகளிலும் தடம் பதித்து வருவதாகத் அவர் மேலும் குறிப்பிட்டார்.

செந்தோசா தீவு, ஆர்ச்சர்ட் ரோடு புதுப்பித்தல்

நாட்டின் பொருளியல் தடத்தை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அனைத்துலகப் பயணிகளைக் கவரும் தன்மையையும் சிங்கப்பூர் தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. ‘பரந்த செந்தோசா பெருந்திட்டத்தின்’ (Greater Sentosa Master Plan) முதல் கட்டம் தொடங்கியுள்ளதாக வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் அறிவித்தார்.

ஓவியரின் சித்திரிப்பில் புதிய செந்தோசா தீவு.
ஓவியரின் சித்திரிப்பில் புதிய செந்தோசா தீவு. - படம்: செந்தோசா மேம்பாட்டு நிறுவனம்

இந்தக் கட்டம் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கவனம் செலுத்துகிறது. செந்தோசா தீவையும் புலாவ் பிரானியையும் (Pulau Brani) இணைக்கும் புதிய போக்குவரத்து நிலையத்தை உருவாக்குவது, செந்தோசா எக்ஸ்பிரஸ் (Sentosa Express) சேவைக்கு மாற்றாகப் புதிய ஏற்பாட்டைச் செய்வது ஆகியவை இதில் அடங்கும்.

தீவின் கடற்கரைகளைப் புதுப்பிப்பதற்கான கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள், பார்வையாளர்களை மரபுடைமைக் கட்டடங்களுக்கும் இயற்கைப் பாதைகளுக்கும் வழிநடத்த ‘இம்பியா கானோபி’ பாதையை (Imbiah Canopy) உருவாக்குவது போன்ற முயற்சிகளும் இதில் இடம்பெறும்.

ஆர்ச்சர்ட் ரோட்டில் நடைபெற்று வரும் புதுப்பிப்புப் பணிகள் குறித்தும் திரு டான் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 37 எமரால்ட் ஹில் (37 Emerald Hill) பகுதியை தனித்துவமான ஹோட்டல்கள், சமூக இடங்களைக் கொண்ட பலபயன்பாட்டு இடமாக மாற்றுவதற்கான ஏலக்குத்தகை விரைவில் தொடங்கப்படும்.

மேலும், 3,000 பேர் கலந்துகொள்ளக்கூடிய அளவிலான ‘கிரேஞ்ச் ரோடு நிகழ்ச்சித் தளம்’ (Grange Road Event Space) இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் நிறைவடையவுள்ளது. இது அந்த வட்டாரத்தின் மையப்பகுதியில் நேரடி இசை, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்