6.21 மில்லியனுக்கு உயர்ந்த சிங்கப்பூர் மக்கள்தொகை

6.21 மில்லியனுக்கு உயர்ந்த சிங்கப்பூர் மக்கள்தொகை

கட்டுமான ஊழியர்களால் மக்கள்தொகை அதிகரிப்பு
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Sep 2026 - 5:26 pm

2 mins read

சிங்கப்பூரின் மக்கள்தொகை இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி 6.21 மில்லியனுக்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு நாட்டின் மக்கள்தொகை 6.11 மில்லியனாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் மக்கள்தொகை 97,300 அதிகரித்தது. அவர்களில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 70,300. குடிமக்கள் எண்ணிக்கை 24,200. நிரந்தரவாசிகள் 2,800 பேர்.

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், அதிகரித்த வீடுகளின் கட்டுமானம் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் சிங்கப்பூருக்கு வந்த கட்டுமான துறை ஊழியர்களால் மக்கள்தொகை 1.6 விழுக்காடு உயர்ந்ததாக தேசிய மக்கள்தொகை, திறன் பிரிவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தெரிவித்தது.

குடியுரிமை இல்லாதோரின் பிரிவின்கீழ் வரும் இந்த ஊழியர்கள், மரினா பே சேன்ட்ஸ் கட்டடத்தின் விரிவாக்கத்திலும் போக்குவரத்து உள்கட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குடிமக்களின் தொகை 0.7 விழுக்காடு சரிந்து இவ்வாண்டு ஜூன் நிலவரப்படி 3.68 மில்லியனானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அது 3.66 மில்லியனாக இருந்ததை தேசிய மக்கள்தொகை, திறன் பிரிவு அதன் வருடாந்தர மக்கள்தொகை அறிக்கையில் சுட்டியது.

சிங்கப்பூரில் உள்ள நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையில் பெரியளவில் மாற்றம் இல்லை. ஜூன் நிலவரப்படி அது 0.55 மில்லியனாக உள்ளது.

கடந்த ஆண்டு 25,094 பேர் குடியுரிமை பெற்றனர். 35,352 பேர் நிரந்தரவாசத் தகுதியைப் பெற்றனர்.

2021ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்ட குடியுரிமை, நிரந்தவாசத் தகுதி ஆகியவற்றின் எண்ணிக்கை முந்தைய ஐந்தாண்டுகளுடன் ஒப்புநோக்க அதிகரித்தது.

அந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூர் சராசரியாக 22,400 பேருக்குக் குடியுரிமையும் 34,600 பேருக்கு நிரந்தரவாசத் தகுதியையும் வழங்கியது.

2016ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை 20,600 பேருக்குக் குடியுரிமையும் 31,200 பேருக்கு நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்பட்டது.

குடிமக்களாக இல்லாதோரின் எண்ணிக்கை 3.7 விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1.91 மில்லியனாக இருந்த அந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் 1.98 மில்லியனானது.

வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போராலும் வெளிநாட்டு ஊழியர்களாலும் அந்த உயர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கும் இடையில் சிங்கப்பூரில் பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்தது.

சிங்கப்பூர் தற்போது அதிக மூப்படைந்த சமூகமாக மாறியுள்ளது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 21 விழுக்காட்டினரின் வயது 65 அல்லது அதற்கும் மேல் ஆனவர்கள்.

கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட குடிமக்களின் எண்ணிக்கை 21,671. 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 22,955ஆக இருந்தது. திருமண விகிதம் 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு 5.6 விழுக்காடு சரிந்தது.

2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும் திருமணம் செய்துகொண்டோரின் சராசரி எண்ணிக்கை 23,000ஆகப் பதிவானது.

2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அந்தச் சராசரி எண்ணிக்கை 23,500ஆக இருந்தது.

சிங்கப்பூரர்களும் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கின்றனர். கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஆண்களின் வயது சராசரியாக 30.8. பெண்களின் வயது சராசரியாக 29.1.

2015ஆம் ஆண்டு ஆண்களின் வயது 30.1ஆகவும் பெண்களின் வயது 27.9ஆகவும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்
மக்கள்தொகைஅதிகரிப்புவெளிநாட்டு ஊழியர்கட்டுமானம்