கப்பல்கள் வருகை, கப்பல் கொள்கலன்களைக் கையாண்டது ஆகியவை தொடர்பாக 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் துறைமுகம் சாதனைகளைப் படைத்துள்ளது.
2024ஆம் ஆண்டில் 3.11 பில்லியன் டன் அளவிலான கப்பல் போக்குவரத்தை அது பதிவு செய்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 3.09 பில்லியன் டன் கப்பல் போக்குவரத்து பதிவானது. கப்பல்களின் இயந்திர அறை, சரக்குகள் வைக்கப்படாத இடங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இவ்வாறு கணக்கிடப்படுகிறது. இதற்கு முன்னில்லாத அளவில், 2024ஆம் ஆண்டு 41.12 மில்லியன் கப்பல் கொள்கலன்களை சிங்கப்பூர் துறைமுகம் கையாண்டது.
2023ஆம் ஆண்டில் 39.01 மில்லியன் கப்பல் கொள்கலன்களை அது கையாண்டது. இந்தத் தகவலை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் புதன்கிழமை (ஜனவரி 15) சிங்கப்பூர் கடல்துறை அறநிறுவனத்தின் புத்தாண்டு நிகழ்வில் வெளியிட்டது. உலகிலேயே ஆக அதிக கப்பல் போக்குவரத்து, கப்பல் கொள்கலன்களைக் கையாளும் துறைமுகங்கள் பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் ஷாங்காய் உள்ளது.
இந்நிலையில், மற்ற பிரிவுகளிலும் சிங்கப்பூர் துறைமுகம் சாதனை படைத்துள்ளது. கப்பலுக்கான எரிபொருள் விற்பனை, சிங்கப்பூரில் பதிவான கப்பல்களின் மொத்த எடை ஆகியவை இதில் அடங்கும்.
இதற்கிடையே, துவாஸ் மெகா துறைமுகத்துக்கான இரண்டாம் கட்ட பணியை முன்னிட்டு நடத்தப்படும் நில மீட்புப் பணிகள் 75 விழுக்காடு நிறைவடைந்துவிட்டன. கப்பல்கள் நிறுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட 11 இடங்களும் இயங்கி வருவதாகத் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. 2027ஆம் ஆண்டுக்குள் மேலும் 7 இடங்கள் தயாராகிவிடும் என்று அது கூறியது.
துவாஸ் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2040களில் அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்போது உலகிலேயே ஆகப் பெரிய, முழுமையாகத் தானியங்கி முறையில் செயல்படும் துறைமுகமாக அது திகழும்.
2027ஆம் ஆண்டுக்குள் தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி முனையங்களில் நடைபெறும் துறைமுகப் பணிகள் $20 பில்லியன் செலவில் கட்டப்படும் துவாஸ் துறைமுகத்துக்கு இடம் மாறும்.
பாசிர் பாஞ்சாங் முனையத்தில் துறைமுகப் பணிகள் தொடரும்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு நடைபெறும் துறைமுகப் பணிகள் 2040களில் துவாஸ் துறைமுகத்துக்கு இடம் மாறும்.
2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் துறைமுகம் மொத்தம் 622.67 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது.
2023ஆம் ஆண்டில் கையாளப்பட்ட 592.01 மில்லியன் டன் சரக்குகளைவிட இது அதிகம்.
இருப்பினும், கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு 2019ல் கையாளப்பட்ட 626.52 மில்லியன் டன் சரக்குகளைவிட 2024ஆம் ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளின் எடை குறைவானதாக இருந்தது.