தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் மேலும் சரிவு

2 mins read
bd7dab37-ea64-4721-ba9b-a3f5cd884dd6
சிங்கப்பூரின் வீட்டுச் செலவினத்தைப் பிரதிபலிக்கும் மூலாதாரப் பணவீக்கம் குறைந்துள்ளது. - எஸ்பிஎச் மீடியா

இவ்வாண்டு பிப்ரவரியில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் குறைந்தது.

தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவு ஆகியவை நீங்கலாக, வீட்டுச் செலவினங்களைப் பிரதிநிதிக்கும் மூலாதாரப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் டிசம்பர் மாத 1.8 விழுக்காட்டிலிருந்தும் ஜனவரி மாத 0.8 விழுக்காட்டிலிருந்தும் பிப்ரவரியில் 0.6 விழுக்காட்டுக்கு மெதுவடைந்தது.

ஜனவரியிலிருந்து பயனீட்டாளர் குறியீடு 2024ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் வீட்டுச் செலவினங்களின் போக்கைச் சரியாக மதிப்பிடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

2021ஆம் ஆண்டில் இருந்த 0.6 விழுக்காட்டுப் பணவீக்கத்திற்குப் பிறகு பிப்ரவரியில்தான் குறைவாகப் பதிவாகியுள்ளது. 2024 பிப்ரவரியில் பதிவான 3.6 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் புளூம்பெர்க் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 0.7 விழுக்காட்டுக்கும்கீழ் பணவீக்கம் குறைந்துள்ளது.

டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியலாளரான சுவா ஹான் டெங், பணவீக்கம் மீதான அழுத்தம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும் என வங்கி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் ஜனவரி மாத 1.2 விழுக்காட்டிலிருந்து பிப்ரவரியில் 0.9 விழுக்காடாக மெதுவடைந்தது.

மூலாதாரப் பணவீக்கத்தைத் தவிர தனியார் போக்குவரத்து பணவீக்கமும் மட்டுப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சும் மார்ச் 24ஆம் தேதி கூட்டறிக்கையில் தெரிவித்தன.

ஓசிபிசி வங்கியின் உலகளாவிய சந்தை மற்றும் ஆய்வு உத்திப் பிரிவின் தலைவரான தலைமை பொருளியல் நிபுணர் செலினா லிங், சிங்கப்பூரின் நாணயக் கொள்கையை மேலும் தளர்த்த வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாத தரவுகளை எடுத்துக்கொண்டால் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு, சில்லறை மற்றும் இதர பொருள்களின் விலை குறைந்துள்ளது.

மின்சாரம், சமையல் எரிவாயுவின் விலை பிப்ரவரியில் 3.1 விழுக்காடு குறைந்தது. இதற்கு முன்பு ஜனவரியில் அது 2.9 விழுக்காட்டுக்குச் சரிந்தது.

சில்லறை, இதர பொருள்களின் விலை பிப்ரவரியில் 0.4 விழுக்காடு குறைந்தது. உடை, காலணி, அறைகலன், வீட்டு உள்ளமைப்புப் பொருள்களின் விலை குறைந்தது இதற்கு காரணமாகும்.

தனியார் போக்குவரத்து செலவு மிதமான அளவு பிப்ரவரியில் 1.6 விழுக்காடு அதிகரித்தது. பெட்ரோல் விலை உயர்வு இதற்கு வழி வகுத்தது.

குறிப்புச் சொற்கள்