சிங்கப்பூரின் ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மை உச்சம்

சிங்கப்பூரின் ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மை உச்சம்

2 mins read
3523538b-8e0e-417a-91c4-59fd51d87cd4
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படும் டௌன்டவுன் ரயில் வழித்தடம் ஆகஸ்ட் மாதம் ஆக அதிக நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் எம்ஆர்டி கட்டமைப்பு முன்னெப்போதையும்விட அதிக நம்பகத்தன்மையை ஆகஸ்ட் மாதம் பெற்றுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) வெளியிட்ட ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மை அறிக்கையில் அந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

எம்ஆர்டி ரயில்கள் 2025 செப்டம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேலான தாமதங்களுக்கு இடையே எம்ஆர்டி ரயில்கள் சராசரியாக 2.88 மில்லியன் ரயில்-கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

அதாவது, அந்த ஓராண்டு காலத்தில் ரயில்கள் ஐந்து நிமிடத்திற்கும் அதிகமான தாமதம் இல்லாமல் சராசரியாக 2.88 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன. ஜூலை மாதம் அது 2.37 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது.

ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மை, ‘எம்கேபிஎஃப்’ எனப்படும் சேவை கோளாறுகளுக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர், என்னும் பொறியியல் அளவீட்டின்கீழ் கணக்கிடப்படுகிறது.

ஐந்து நிமிடங்களுக்கு மேலான தாமதத்தைச் சந்திப்பதற்கு முன்பு ஒரு ரயில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பதை இந்தக் கணக்கீடு காட்டுகிறது.

அந்த சராசரி கிலோமீட்டர் ஒரு மில்லியனாக இருக்க வேண்டும் என்பது சிங்கப்பூரின் ரயில் போக்குவரத்து நம்பகத்தன்மைக்கான இலக்கு.

ஆகஸ்ட் மாதம் அந்த இலக்கைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு தூரம் பதிவாகி உள்ளது.

அந்த மாதத்தில் ஐந்து முக்கிய எம்ஆர்டி வழித்தடங்கள் மற்றும் எல்ஆர்டி கட்டமைப்பில் 30 நிமிடங்களுக்கு மேலான பெரிய தாமதங்கள் எதுவும் நிகழவில்லை.

கிழக்கு மேற்கு வழித்தடத்தில் (EWL) ஆகக் கடைசியாக 2025 நவம்பர் மாதம் அத்தகைய தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு, அந்த வழித்தடத்தில் தாமதம் எதுவும் நிகழவில்லை. தாமதம் நிகழாத ஆக அதிக காலகட்டமாக இது பார்க்கப்படுகிறது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படும் டௌன்டவுன் ரயில் வழித்தடம் ஆக அதிக நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் மாதம் அந்த வழித்தடத்தில் ஏற்பட்ட சேவைத் தாமதங்களுக்கு இடைப்பட்ட சராசரி தூரம் 8.37 மில்லியன் ரயில்-கிமீ ஆக இருந்தது.

அது ஜூலை மாதத்தில் இருந்த 4.2 மில்லியன் ரயில்-கிமீ அளவைவிட ஏறக்குறைய இருமடங்காகும். மேலும், அது 99.3 விழுக்காட்டு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

இரண்டாவது இடத்தில் வடக்கு கிழக்கு (NEL) வழித்தடம் உள்ளது. இதுவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் ஆகஸ்ட் மாதம் சேவைத் தாமதங்களுக்கு இடைப்பட்ட தூரம் 4.48 மில்லியன் ரயில்-கிமீ ஆகப் பதிவானது. அது முந்தைய மாதத்தில் இருந்த 4.47 மில்லியன் ரயில்-கிமீ அளவைவிட அதிகம்.

இதற்கு முன்னர், இதுவே மிகவும் நம்பகமான வழித்தடமாகத் திகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்
ரயில் சேவைஎம்ஆர்டிநம்பகத்தன்மை