தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை எதிர்பார்ப்பை விஞ்சி 4.8% கூடியது

2 mins read
c0c1b0e1-af88-4669-bfd7-69994d86a9ac
பெரும்பாலான தொழில்துறைகளின் வளர்ச்சி ஏற்றங்கண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில் ஜூலை மாதம் 4.8 விழுக்காடு கூடியது. ஜூன் மாதத்தின் 2.4 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம். புளூம்பெர்க் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 2.1 விழுக்காட்டு வளர்ச்சியை விட ஜூலை மாத வளர்ச்சி ஒரு மடங்கு அதிகம்.

புள்ளிவிவரத் துறை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மாத அடிப்படையில் சில்லறை விற்பனை ஜூலையில் 4.1 விழுக்காடு ஏற்றங்கண்டது. ஒப்புநோக்க அது ஜூன் மாதத்தில் 1.1 விழுக்காடு குறைந்திருந்தது. மோட்டார் வாகனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது சில்லறை விற்பனை மாத அடிப்படையில் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது. ஜூன் மாதம் அது 1.2 விழுக்காடு இறங்கியிருந்தது.

ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தச் சில்லறை விற்பனையின் மதிப்பு $4.2 பில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 13.1 விழுக்காடு, இணையச் சில்லறை விற்பனையின் மூலம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பதிவான 13.5 விழுக்காட்டை விட அது குறைவு.

ஒட்டுமொத்தக் கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்களின் விற்பனையில் இணையச் சில்லறை விற்பனையின் பங்கு 54 விழுக்காடு. அறைகலன்கள், வீட்டுச் சாதனங்களைப் பொறுத்தவரை அது 32.8 விழுக்காடாகவும் பேரங்காடி, மாபெரும் பேரங்காடித் துறையில் 11.8 விழுக்காடாகவும் இருந்தது.

பெரும்பாலான தொழில்துறைகள் வளர்ச்சி கண்டன. கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்களின் விற்பனை 11.1 விழுக்காடு அதிகரித்தது. கடிகாரங்கள், நகைகள் விற்பனை 9.6 விழுக்காடு அதிகரித்தது.

கண்ணாடிப் பொருள்கள், புத்தகங்களின் விற்பனை 8.6 விழுக்காடு உயர்ந்தது.

உணவு, பானத் துறையின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் 1.7 விழுக்காடு கூடியது. ஜூன் மாதத்தில் வளர்ச்சி நிலையாக இருந்தது.

மாறாக, பெட்ரோல் சேவை நிலையங்களில் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் ஜூலை மாதம் 5.6 விழுக்காடு சுருங்கியது.

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் வேளையில் சில்லறை வர்த்தகத் துறை வளர்ச்சி கண்டுள்ளது. வருங்காலத்தில் வர்த்தகம் மெதுவடைந்தால் அதனை எதிர்கொள்ளத் தற்போதைய வளர்ச்சி உதவியாக இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்