ஏப்ரல் மாதத்தில் ஏற்றம் கண்ட சிங்கப்பூரின் சில்லறை விற்பனை

ஏப்ரல் மாதத்தில் ஏற்றம் கண்ட சிங்கப்பூரின் சில்லறை விற்பனை

2 mins read
835880e3-2799-4f0c-8a34-76b5bebcd713
சிங்கப்பூரின் சில்லறை விற்பனை மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றத்துக்கு இடையே வளர்ச்சிக் கண்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் சில்லறை விற்பனை இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் சூடுபிடித்ததாகச் சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றத்துக்கு இடையே சில்லறை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.4 விழுக்காடு அதாவது ஏறக்குறைய $4.3 பில்லியனுக்கு உயர்ந்ததாக வெள்ளிக்கிழமை (ஜூன் 5) புள்ளிவிவரத் துறை சொன்னது.

மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனை 4.6 விழுக்காடாக இருந்தது. பெரும்பாலான சில்லறை வர்த்தகத் துறைகளில் ஏப்ரல் மாதம் அதிகமான விற்பனை பதிவானது.

ஏப்ரல் மாதத்தில் பதிவான ஒட்டுமொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 15.4 விழுக்காடு இணையப் பரிவர்த்தனை மூலம் பெறப்பட்டது.

மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து சில்லறை விற்பனை 4.5 விழுக்காடு அதாவது $3.6 பில்லியனுக்கு உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 3.0 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது.

பெரும்பாலான சில்லறை வர்த்தகத் துறையில் கணிசமான வளர்ச்சிப் பதிவானது. குறிப்பாக, பெட்ரோல் நிலையங்களின் சேவைகள், பொழுதுபோக்குப் பொருள்கள், மோட்டார் வாகனங்கள், அவற்றின் பாகங்கள் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்தது.

அவற்றுள் பெட்ரோல் நிலையத்தின் சேவைகள் ஆக அதிகமான வளர்ச்சியைக் கண்டது. ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் விற்பனை 14.4 விழுக்காடு அதிகரித்தது. பெட்ரோல் விலைகளின் உயர்வால் அந்த நிலை ஏற்பட்டதாகச் சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டது.

ஆடை, காலணி ஆகியவற்றின் விற்பனை கிட்டத்தட்ட 7.8 விழுக்காடு அதிகரித்தது. கைக்கடிகாரங்கள், ஆபரணங்களின் விற்பனை 6.4 விழுக்காடும் ஒப்பனை, குளியலறை பொருள்கள், மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனை 6.2 விழுக்காடும் பதிவாகின.

மாறாக, பல்பொருள் அங்காடிகளின் விற்பனை 1.1 , உணவு, மதுபானத்தின் விற்பனை 0.1 விழுக்காடும் சரிந்தன.

உணவு, பானச் சேவைகளின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.4 விழுக்காடு உயர்ந்து $1.5 பில்லியன் ஆனது.

இணையத் தளங்களில் பகிரப்படும் உணவு, பான விற்பனை ஏப்ரல் மாதத்தில் 19.9 விழுக்காடு சரிந்தது. மார்ச் மாதத்தில் அது 20.4 விழுக்காடாகப் பதிவானது.

விரைவு உணவுகளின் விற்பனை வலுவான வளர்ச்சி கண்டது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அது 3.2 விழுக்காடு உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்