தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை பிப்ரவரியில் 3.6% சரிவு

2 mins read
a99d51ff-ca67-4c4f-b877-8e05cf99519e
பொருளியல் நிபுணர்கள் கணித்ததைவிட சில்லறை விற்பனை கடந்த பிப்ரவரியில் கணிசமாக சுருங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த மாதம் பதிவான சில்லறை விற்பனை முன்னுரைக்கப்பட்டதைவிட அதிகமாக சரிவு கண்டுள்ளது. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஜனவரியில் அது சற்று ஏற்றம் கண்டது.

ஆண்டு அடிப்படையில் பதிவான சில்லறை வர்த்தகம் கடந்த மாதம் 3.6 விழுக்காட்டுக் குறைந்ததாக சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை (ஏப்ரல் 4) தெரிவித்தது.

ஜனவரி மாதம் புத்தாண்டுக் கொண்ட்டாட்டத்தை முன்னிட்டு சில்லறை விற்பனை 4.5 விழுக்காடு கூடியது.

“கடந்த 2024ஆம் ஆண்டில் சீனப் புத்தாண்டு பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டு அது ஜனவரியில் கொண்டாடப்பட்டதும் பிப்ரவரியில் சில்லறை விற்பனை சரிய ஒரு காரணம்,” என்று புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரியில் சில்லறை விற்பனை 0.2 விழுக்காடு குறைவாகப் பதிவாகும் என்று பொருளியல் நிபுணர்கள் கணித்ததைவிட பதிவான சில்லறை விற்பனை மோசமாகச் சுருங்கியது.

சீனப் புத்தாண்டைத் தவிர ஜனவரியிலும் பிப்ரவரியிலும் கார் விற்பனையால் சில்லறை விற்பனை 0.8 விழுக்காடு கூடியது.

ஆண்டு அடிப்படையில், ஆடை மற்றும் காலணி விற்பனை ஆகக் கடுமையான சரிவைச் சந்தித்தது. அவற்றின் சில்லறை விற்பனை 18.4 விழுக்காடாகக் குறைவாகப் பதிவானது.

அதைத் தொடர்ந்து பேரங்காடிகள், சிற்றங்காடிகள் ஆகியவை அடிவாங்கின.

மோட்டார் வாகனங்கள், புத்தகங்கள், கணினிகள், தொலைதொடர்புக் கருவிகள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்தது.

ஒட்டுமொத்த உணவு, பான விற்பனைகளின் மதிப்பு பிப்ரவரியில் $961 மில்லியன். அவற்றுள் ஏறக்குறைய 23 விழுக்காடு இணைய விற்பனை மூலம் வந்தவை.

அதே நேரத்தில், உணவகங்களில் 10.2 விழுக்காடும் விரைவு உணவகங்களில் 8.2 விழுக்காடும் வருமானம் குறைந்தது. மாறாக, உணவு விநியோகத் துறை வருமானம் ஆண்டு அடிப்படையில் 6.6 விழுக்காடு கூடியது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிகளால் சிங்கப்பூரில் சில்லறை விற்பனை விலைகளை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வரி உயர்வால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்நாட்டுத் தேவையும் வளர்ச்சியும் குறையலாம் என்பதால், பெரும்பாலும் பணவாட்டம் ஏற்படலாம் அல்லது விலைகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியலாளர் செலினா லிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்